முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுகிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் அதிமுக சார்பில் ரமலான் இப்தார் நோன்பு நேற்று (மார்ச் 13) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் விவகாரத்தை விமர்சித்து வரும் அண்ணாமலை அதிமுக டாஸ்மாக் கடைகளைத் தொடர்ந்து நடத்தியதாக விமர்சித்துள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘பாஜக ஆளும் மாநிலங்களில் பூராவும் அப்படிதான் இருக்கிறது. இன்று (நேற்று) கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பிலான போதைபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப்போகிறார்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக இன்று (மார்ச் 14) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், “போர் பந்தரிலிருந்து 60 கிமீ தொலைவில் இருந்து ஒரு படகைப் பிடித்திருக்கிறார்கள். அந்த படகு ஈரானிலிருந்து வரக்கூடிய படகு. அதில் வரக்கூடிய சரக்கு சென்னை வரவேண்டியது. அதை முந்த்ரா துறைமுகத்தில் பிடித்திருக்கிறார்கள். அதைப் பாராட்ட வேண்டுமே தவிர, இப்படி விமர்சிக்கக் கூடாது.
இதை முன்னாள் முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். அரைவேக்காட்டுத்தனமாக பேசக்கூடாது.
தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய குற்றச்சாட்டு என்பது ஆளும் கட்சிக்கு இருக்கக்கூடிய தொடர்பு. பங்காளி கட்சி என்பதை முன்னாள் முதல்வர் மறுபடியும் உறுதி செய்திருக்கிறார்.
அவர்களுக்கு (திமுக) பதிலாக இவர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் அரைவேக்காடு_அண்ணாமலை என அதிமுகவினர் ட்விட்டரில் ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
AK 63: ‘கொல மாஸ்’ 22 ஆண்டுகளுக்கு பிறகு… அஜித் செய்த சம்பவம்!
போதைப்பொருள் விவகாரம்… எடப்பாடி மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்த திமுக!