திமுக பொருளாளர் டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை இன்று (ஜூலை 14) ஆஜராகிறார்.
திமுகவை சேர்ந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பிக்கள் கனிமொழி, டிஆர்.பாலு உள்ளிட்ட 12 நபர்களின் சொத்து பட்டியலை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
ஊழல் பட்டியல் என்று கூறி சொத்து பட்டியலை வெளியிட்டதாக பலராலும் இது விமர்சிக்கப்பட்டது. மேலும் இந்த பட்டியல் தொடர்பாக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி திமுக சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதற்கு அண்ணாமலை எந்த விதமான ரியாக்ஷனும் கொடுக்காத நிலையில், அவர் மீது திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வரும் இந்த வழக்கில் அண்ணாமலை நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக எம்.பி. டி.ஆர் பாலு தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஊழல் என்னும் கரையானை அரசியலில் இருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை பொதுமக்கள் அறிவார்கள். திமுகவினர் சொத்துகுவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளையும் நீதிமன்றம் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.
ஆகவே பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அவதூறு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா