பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 3வது கட்ட என் மண் என் மக்கள் நடைபயணம் அவிநாசியில் இன்று (அக்டோபர் 16) தொடங்கியது.
’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாஜவின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே 2 கட்ட நடைபயணம் நிறைவுபெற்ற நிலையில் 3வது கட்டம் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் டெல்லி பயணம் மற்றும் உடல் நிலை காரணமாக நடைபயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் 3வது கட்டம் இன்று திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தொடங்கியது. இந்த நடைபயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய விவகாரங்கள் துறை அமைச்சர் புயூஷ் கோயல் கலந்து கொண்டார். நடைபயணத்தை தொடங்கி வைத்த அவர் அவிநாசி சேவூர் சாலையில் நடைபயணம் சென்றார்.
இன்றைய நடைபயணத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நடைபயணத்தின் போது பாஜக தொண்டர்கள் மத்திய அமைச்சர் மற்றும் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நடைபயணத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அவிநாசியில் தொடங்கியுள்ள இந்த பாத யாத்திரை அவிநாசி மேற்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, கோவை மெயின் ரோடு, புதிய பேருந்து நிலையம் வரை என நான்கரை கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபயணம் தொடர உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா