அண்ணாமலை டிராமா விரைவில் முடியும்: எஸ்.வி.சேகர்  பேட்டி!

அரசியல்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜகவைச் சேர்ந்தவருமான  எஸ்.வி.சேகருக்கும் இடையே  வார்த்தைப் பரிமாற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் எஸ்.வி. சேகரிடம் மின்னம்பலம்  சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம்,

உங்களுக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே என்ன பிரச்சினை?

எனக்கும் அவருக்கும் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது? நான் பாஜகவில் குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்று சொன்னேன்.  அவ்வளவுதான். அவருக்கு என் மகனை விட குறைந்த வயதுதான் இருக்கும். அவரோடு எனக்கு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது. நான் மோடியின் ஆதரவாளன்.  நான் தேர்தலில் நிற்க வேண்டும் என்றோ கட்சிப் பதவி வேண்டும் என்றோ ஆசைப்படுபவன் அல்ல.  

என்னைப் பற்றி புகார் சொல்ல வேண்டுமானால் டெல்லிக்கு சென்று சொல்லுங்கள் என்றும், ஃப்ளைட் டிக்கெட் ஆறாயிரம் ரூபாய்தான் என்றும், வேண்டுமென்றால் தானே அதை போட்டுத் தருவதாகவும் உங்களைப் பற்றி அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?

ஃப்ளைட் டிக்கெட் ஆறாயிரம் ரூபாய் அப்புறம் டெல்லியில போய்  ரோட்ல தங்கறதா? ஹோட்டல் வேண்டாமா?  இவர்தான் வாழ்க்கையையே அடுத்தவன் காசுல வாழ்ந்துக்கிட்டிருக்காரு. நான் அப்படி இல்லை. உழைச்சு சம்பாதிக்குறவன்.  எனக்கெல்லாம் அவர் செலவழிக்க வேண்டாம். என் பேரைச் சொல்லி இன்னும் நாலு வேளை அவர் சாப்பிட்டுப் போகட்டும். 

என் ஸ்டைல் இதுதான் நான் யார் சொல்லியும் மாற மாட்டேன் என்றும் அண்ணாமலை சொல்கிறாரே?

அவர் மாற வேண்டாங்க. காலம் மாற்றும். அவர் அதிமுக கூட்டணி அமைந்தால் ராஜினாமா செய்துவிடுவேன் என்று சொன்னார். அவர் மானஸ்தனா இல்லையா என்று பார்க்கப் போறோம். 

உங்களைப் பற்றிய கேள்விக்கு பழைய பஞ்சாங்கங்களை தூக்கிக் கொண்டுவராதீர்கள் என்று சொல்கிறாரே அண்ணாமலை?

அதுதான் பிராமண எதிர்ப்பு வெறி. அதனால்தான் அவர் அப்படி பேசுகிறார்.  ஆனால்  அவர்கள் வீட்டிலேயே நல்ல விஷயத்துக்கு நட்சத்திரம் பார்க்கணும்  கெட்ட விஷயம் திதி பார்க்கணும்னா பஞ்சாங்கம் தேவை. சூரியனைப் பார்த்தா கண்டுபிடிப்பார்?

நீங்கள் தமிழக பாஜகவில் பிராமண நிர்வாகிகள் திட்டமிட்டு நீக்கப்படுவதாக சொல்கிறீர்கள். ஆனால் திருப்பதி நாராயணன் போன்றவர்கள் இப்போது பதவிகளில் இருக்கிறார்களே?

அவர் இருக்கிறார். எத்தனை பேரை நீக்கியிருக்கிறார்கள்? சென்னை தி.நகரில்  134 ஆவது வார்டில் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக ஜெயித்தவர் உமா.  அவரது போட்டோவையே போஸ்டர்களில் போடக் கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள்.  பாஜக வெற்றி பெற்ற அந்த வார்டில் மூன்று நிர்வாகிகளை மாற்றியிருக்கிறார்.

மாற்றினாலும் அதே சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளைதானே நியமிக்க வேண்டும்? ஆனால் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை அல்லவா நியமித்திருக்கிறார்.  சேலத்தில் மகேஷ் என்பவர் மோடி அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு பணிகளை செய்துவந்தார்.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு  கிடைக்க அவரே அப்ளிகேஷன் ஃபார்ம்களை கொடுத்து விண்ணப்பித்து உதவிகளையும் பெற்றுக் கொடுத்து வந்தார். அவரை அண்ணாமலை நீக்கிவிட்டார். இதுபோல் பலரை நீக்கியிருக்கிறார். 

அண்ணாமலை  இதுபோன்ற மாற்றங்களை பாஜக மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில்தானே செய்கிறார்? 

Annamalai drama end soon

பாஜகவைப் பற்றி இவருக்கு என்ன தெரியும்? பாஜகவின் சிஸ்டம் தெரியுமா?  பாஜகவின் ஐடியாலஜி தெரியுமா? அவர் ஒரு போலீஸ்காரர். கீழே இருக்கிறவனிடம் இருந்து சல்யூட்டை வாங்கி, மேலே இருக்கிறவர்களுக்கு சல்யூட் போட்டு போலீசில் காலத்தை ஓட்டினார்.

அங்கேயும் ஆடியோ வீடியோ வேலைகளை செய்து, ‘நீயா ரிசைன் பண்ணிட்டு போறியா? நாங்களே அனுப்பட்டுமா?’ என்று கேட்டவுடன்  தானாக ரிசைன் பண்ணிவிட்டு வந்தவர். குமாரசாமி கர்நாடக முதல்வராக இருந்தபோது நடந்துதானே இது.

இவர் என்ன அரசியலுக்கு வரவேண்டும் என்றா போலீஸ் வேலையை விட்டுவிட்டு வந்தார்? பிறகு ரஜினிகாந்தை நம்பி வந்தார்.  அவர் முடிவெடுக்கும் முன் அவசரப்பட்டு  சிலரை சந்தோஷப்படுத்தி பாஜகவில் பதவிக்கு வந்தார்.  இவர் பாஜகவின் பைலா படி வந்த தலைவர் இல்லை. யானை மாலை போட்டு திடீரென ராஜாவானவர். ஒரு சிலரை சந்தோஷப்படுத்தி இவர் இந்த பதவிக்கு வந்துள்ளார். அந்த சந்தோஷம் விரைவில் துக்கமாக மாறும். 

என்னைப் பற்றி குறை இருந்தால் டெல்லி போய் சொல்லுங்கள் என்று சொல்கிறார். அவர் மேலிடத்தின் அனுமதியோடு செயல்படுவது போல்தானே தெரிகிறது?

நான் என்ன செய்ய வேண்டும் என்று அண்ணாமலை சொல்ல கூடாது.   டெக்னாலஜி காலத்தில் எதுக்கெடுத்தாலும் டெல்லிக்கு போகணும் என்று அவசியம் இல்லை. இங்க இருந்து கொண்டே டெல்லிக்கு சொல்வதற்கு எனக்கு வசதி இருக்கு. செல்வாக்கும் இருக்கிறது.  

உங்கள் கோரிக்கை என்ன?  தமிழக பாஜகவில் பிராமணரை  தலைவராக நியமிக்க வேண்டும் என்கிறீர்களா?

நான் எப்போதும் அப்படி சொல்லவில்லையே? பிராமணரான இல.கணேசன் ஏற்கனவே தமிழக பாஜகவின் தலைவராக இருந்திருக்கிறார். ஜனா கிருஷ்ணமூர்த்தி தேசிய தலைவராகவும் இருந்திருக்கிறார். பிராமணர்களுக்காகவே நான் கோரிக்கை வைக்கவில்லை.  தமிழ்நாட்டில் வன்னியர்கள் அதிகமாக இருக்கிறார்கள், அவர்களில் இருந்து ஒரு தலைவர் வரலாமே? பிரதமர் மோடியே,  ’நான் நரேந்திரன், நீங்கள் தேவேந்திரர்’  என்று சொன்ன தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவரை  நியமிக்கலாமே?  தமிழ்நாடு பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் 2 பேர்தான் வன்னியர்கள், 30 பேர் அண்ணாமலை சமுதாயத்தினர்தான் இருக்கிறார்கள். ஒரு போருக்கு போகிறோம் என்றால் எதிரிகள் தலையைதான் சீவ வேண்டும். கூட  வருகிறவர்கள் தலைகளை எல்லாம் சீவிக் கொண்டே இருந்தால் எதிரியிடம் போய் என்ன செய்ய முடியும்?  

Annamalai drama end soon

பிராமணர்களுக்கு என்று தனிக்கட்சி தொடங்கப்போவதாக சொல்கிறார்களே

அதற்கான திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. அதுபற்றி என்னிடம் கூட பேசினார்கள்.  இப்போதைக்கு மோடியை நான் மீட் பண்ணிய பிறகுதான் எதையும் சொல்ல முடியும். தமிழ்நாட்டில் பிராமணர்கள் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக இருந்தது. ஆனால் அதற்கான சூழல் இப்போது இல்லை.  நான்தான் மோடியிடம்  முதன் முதலில்  2011 இல் நீங்கள் பிரதமராக வருவீர்கள் என்று சொன்னேன். 2013 இல் மூன்று முறை பிரதமராக வருவீர்கள் என்று சொன்னேன். வரும் 2024 தேர்தலிலும் மோடி பிரதமராக வருவார்.

அண்ணாமலை தலைமையில் கட்சி வளர்கிறது என்று பாஜகவினர் கூறுகிறார்கள். இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

கட்சி வளர்ந்ததா இல்லையா என்பதை 2024 தேர்தல் சொல்லும்.  இரண்டு மார்க் வாங்குகிற பையன் கூட பரீட்சை ரிசல்ட்  வரும் வரைக்கும் நான் 98 மார்க் வாங்குவேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பான்.  அதுமாதிரி வாய் உதார்தான் அவர். நான் தொழில் ரீதியாக ஏழாயிரம் டிராமா போட்டிருக்கிறேன். ஆனால் அண்ணாமலை அரசியலில் அதை விட பெரிய டிராமாக்களை போட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் திரை விழும், நாடகம் முடியும், வேடம் கலையும். 

ஃபெலிக்ஸ் 

நீச்சல் பயிற்சிக்கு போய் பலியான சிறுவன்: தாயாரின் கண்ணீர்க் கேள்விகள்!

மேல்பாதி கோவில் விவகாரம்: 62 பேரிடம் விசாரணை!

+1
0
+1
4
+1
0
+1
4
+1
2
+1
0
+1
0

1 thought on “அண்ணாமலை டிராமா விரைவில் முடியும்: எஸ்.வி.சேகர்  பேட்டி!

  1. மக்கள் விரோத பாஜகவில் ஆரிய திராவிட சண்டை. கைதட்டி வேடிக்கை பார்க்க வேண்டியது தான். தமாசா இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *