”சிவராமன், அவரது தந்தை மரணத்தில் சந்தேகம்” : அண்ணாமலை

Published On:

| By christopher

Annamalai doubts on Sivaraman and his father's death

போக்சோ வழக்கில் கைதான சிவராமன் மற்றும் விபத்தில் சிக்கி உயிரிழந்த அவரது தந்தை ஆகியோரின் மரணம் சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அவர் கைதுக்கு பயந்து எலிபேஸ்ட் சாப்பிட்டது தெரியவந்ததை அடுத்து சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சிவராமன் கைதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த அவரது தந்தை அசோக்குமாரும் இன்று நள்ளிரவில் காவேரிப்பட்டணம் பகுதியில் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ஒரே நேரத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மரணங்கள் கொலையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன.

சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மேலும் சரிந்தது தங்கம் விலை…செம்ம வாய்ப்பு!

தவெக கொடி சர்ச்சை : விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்யக்கோரி புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share