டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியோடு அண்ணாமலை டீல்?  பாஜக நிர்வாகியை ‘தூக்கிய’ எடப்பாடி

அரசியல்

வைஃபை  ஆன் செய்ததும் வட மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக பல தகவல்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் தமிழக பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்த  போட்டோவும் வந்தது. அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“வார் ரூம் வைத்துக் கொண்டு சொந்த கட்சியினரையே வேவு பார்க்கிறார் அண்ணாமலை என்று பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருந்தார்.

அவர் பாஜகவில் இல்லை என்றாகிவிட்ட நிலையில், அவரது புகார்களை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் பாஜக ஐடி விங் மாநில தலைவர் நிர்மல் குமார் புகார்களைச் சொல்லி, மார்ச் 5 ஆம் தேதி பாஜகவில் இருந்து விலகியிருக்கிறார். நிர்மலும் காயத்ரி சொன்ன அதே புகார்களைதான் கூறியிருக்கிறார்.

Annamalai deal with Senthil Balaji

அவர் மார்ச் 5 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். 

எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்? மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களேயே மிஞ்சும் அளவிற்கு ஒரு #420மலை-யாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு.

தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்?’ என்று கேள்வியோடு முடித்த நிர்மல் குமார், இந்த அறிக்கை வெளியிட்ட சூட்டோடு சூடாக சென்னையில்  அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளார் எடப்பாடியை சந்தித்து  அதிமுகவில் சேர்ந்துவிட்டார்.

Annamalai deal with Senthil Balaji

தனது அறிக்கையில் அண்ணாமலையின் பெயரை நேரடியாக கூறாவிட்டாலும்… 420 மலை என்று அண்ணாமலையே அவர் குறிப்பிடுகிறார்.

மேலும்  அமைச்சர் செந்தில்பாலாஜி டாஸ்மாக் துறையில் பல முறைகேடுகள் செய்கிறார் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடமே புகார் கொடுத்தார் நிர்மல் குமார். இதுகுறித்து பேட்டிகளும் அளித்தார்.

இந்த நிலையில் தன்னைப் பற்றி நிர்மல் குமார் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்றார் செந்தில்பாலாஜி. இந்த அளவுக்கு செந்தில்பாலாஜியை தான் எதிர்த்துக் கொண்டிருந்த நிலையில், அவரோடு அண்ணாமலை திரைமறைவில் பேரம் பேசுகிறார் என்று அண்ணாமலை மீது குற்றம் சாட்டியுள்ளார் நிர்மல் குமார்.

வேவு பார்க்கும் புகார், செந்தில்பாலாஜியுடன் டீல் என்ற புகார் என முக்கியமான புகார்களை நிர்மல் குமார் வைத்து விலகிய நிலையில்….அதற்கெல்லாம் பதில் சொல்லாத அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மல் குமாரை வாழ்த்தி வழியனுப்பி வைத்திருக்கிறார்.

இப்படி பாஜகவுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் அதிமுக- பாஜக கூட்டணிக்குள்ளேயும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுகவும் பாஜகவும் இப்போது வரை கூட்டணியில்தான் இருக்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் கூட  அதிமுக வேட்பாளருக்காக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் சக கூட்டணிக் கட்சியான பாஜகவில் மாநில ஐடி விங் தலைவரை  திடீரென்று தன் முன்னிலையிலேயே அதிமுகவில் சேர்த்துக் கொண்ட எடப்பாடியின் செயலை தமிழக பாஜக முதல் டெல்லி பாஜக வரை ரசிக்கவில்லை.

அப்படியென்றால் பாஜகவில் இருந்து யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என்ற மெசேஜை சொல்லாமல் சொல்கிறாரா எடப்பாடி? இதன் மூலம் பாஜக கூட்டணியை விட்டு சென்றாலும் பரவாயில்லை என்று சொல்கிறாரா எடப்பாடி?  என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

நிர்மல் குமார் பாஜக தலைவர் அண்ணாமலை மீது  அதிர்ச்சிப் புகார்களை சொல்லிவிட்டு விலகியது ஓர் அதிர்ச்சி என்றால், அவரை உடனடியாக அதிமுகவில் எடப்பாடி சேர்த்துக் கொண்டது அடுத்த அதிர்ச்சியாக பாஜகவுக்குள் பேசப்படுகிறது. இந்த விவகாரம் மேலும் அடுத்தடுத்த கட்டங்களை எட்டும் என்கிறார்கள் பாஜக தரப்பில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கீழடி அருங்காட்சியகம்: திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர்

ஜாக்டோ ஜியோ போராட்டம்: சொன்னதைச் செய்வாரா முதல்வர்?

+1
0
+1
1
+1
0
+1
2
+1
4
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *