பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் காலதாமதமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 21) தெரிவித்துள்ளார்.
பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். ஊழல் வழக்கு என்பதால் பொன்முடி உடனடியாக தனது அமைச்சர் பதவியை இழக்கிறார். இதே போல கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான வழக்குகளையும் விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலையீட்டிற்கு பிறகு தான் பொன்முடி வழக்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அரசு பணத்தில் ஊழல் செய்தவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும். பொன்முடி வழக்கில் காலதாமதமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளையும் விரைந்து விசாரிக்க வேண்டுமா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “என்னுடைய அரசியல் என்பது ஊழலுக்கு எதிரானது. மக்கள் பணத்தை யார் கொள்ளையடித்தார்களோ அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளையடித்ததால் தமிழகத்தின் அரசியல் அதளபாதாளத்தில் உள்ளது. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை, 50 லட்சம் அபராதம்! உயர்நீதிமன்றம் உத்தரவு!