விஜயகாந்திற்கு அரசு இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் எல்லா பகுதிகளில் இருந்தும் வரக் கூடிய தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் விஜயகாந்தின் உடலை வைக்க வேண்டும்.
நாளை பெரிய அளவில் கூட்டம் வர இருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தவறாகிவிடும். எனவே முதலமைச்சர் உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை தாண்டி, நடிகர் என்பதை தாண்டி, தமிழக மக்களின் மனதில் இருக்கக் கூடிய பெரிய தலைவர். அவருக்கு அரசு இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.
பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜனும் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “எனது நீண்ட கால நண்பர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு ரீதியாக அவரோடு 35 ஆண்டுகளுக்கும் மேலாக நான் பழகியவன். 1980 களில் அவரோடு ’ஒர் இனிய உதயம்’ என்ற திரைப்படத்திலும் 1995-ல் காந்தி பிறந்த மண்ணிலும் நான் நடித்திருக்கிறேன்.
அவர் சிறந்த திரைப்பட கலைஞர் மட்டுமன்றி, ஆளுமைத்திறன் மிக்க அரசியல் தலைவராகவும் திகழ்ந்து வந்தவர். தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். தமிழக அரசியலில் இன்னும் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டிய அவர், துரதிருஷ்டவசமாக மறைந்தது தமிழ் திரையுலகிற்கும் அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
தலைவர் மூப்பனாரோடு நான் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்தின் முக்கியமான நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததை இத்தருணத்தில் கண்ணீர் மல்க நினைத்துப் பார்க்கிறேன். நட்பில் நாகரீகமும் அரசியலில் கண்ணியமும், நிறைந்து விளங்கிய அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகத்திற்கும், தேமுதிக அரசியல் தோழர்களுக்கும், அவருடன் பழகிய அனைத்து நண்பர்களுக்கும் எனது ஆற்ற முடியாத ஆழ்ந்த வருத்தத்தையும், துயரத்தையும் கண்ணீர் மல்க தெரிவித்துக் கொள்கிறேன்.
என் இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறையவில்லை என் இதயத்தில் என்றென்றும் வாழ்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
‘போராடடா ஒரு வாளேந்தடா’, ‘உனக்காக நாடே அழுகுதப்பா’… ரசிகர்கள் அதிகம் பகிரும் வீடியோக்கள் இதுதான்!
விஜயகாந்த் கட்சியை அறிவித்த அந்த நாள்… நினைவுகளை பகிர்ந்த பவன் கல்யாண்