ரகுபதி சட்டத்துறை அமைச்சரா அல்லது திமுகவின் பேட்டை ரவுடியா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 21) காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக போதுமான அளவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது தான் இறந்திருக்கிறார். அவரது இறுதி ஊர்வலத்திற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.
சமூக விரோதிகளுக்கும், பல்வேறு வழக்குகளில் சிக்கியிருப்பவர்களுக்கும் பதவிகள் கொடுப்பது பாஜக தான். ஏற்கனவே இதை ஆதாரப்பூர்வமாக நாங்கள் வெளியிட்டிருக்கிறோம்.
பாஜகவினர் எப்போதும் கையில் ஆயுதத்தை வைத்திருப்பவர்கள். நாங்கள் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை. திமுகவை பொறுத்தவரை நாங்கள் அமைதி வழியில் தான் செல்ல விரும்புகிறோம்” என்றார்.
தொடர்ந்து நெல்லையில் நீதிமன்ற வாசலில் நடைபெற்ற கொலை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரகுபதி, “எந்த சம்பவமும் நடக்காமல் தடுக்க முடியாது. ஆனால், சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையை நீங்கள் பாராட்ட வேண்டுமே தவிர, சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்?
இந்த இடத்தில் நீங்கள் யாராவது ஒருவரை அரிவாளால் வெட்டப் போகிறார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? இந்த கூட்டத்திலேயே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், அதை தடுக்கக்கூடிய சக்தி திமுகவிற்கு இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி, அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் ஜெயக்குமாரின் கருத்து தான் எனது கருத்து என்று சொல்கிறார். பின்னர் ஏன் அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் பதவி?” என்று கேள்வி எழுப்பினார்.
ஆளுநரை மாற்ற திமுக அழுத்தம் கொடுக்குமா என்ற கேள்விக்கு, “ஆளுநரை மாற்ற நாங்கள் வலியுறுத்த மாட்டோம். நாங்கள் வலியுறுத்தினால் அவர் இன்னும் வலிமையாக உட்கார்ந்து கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
பாஜகவினர் எப்போதும் கையில் ஆயுதத்தை வைத்திருப்பவர்கள் என்ற அமைச்சர் ரகுபதியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அமைச்சர் ரகுபதி சட்டத்துறை அமைச்சரா அல்லது திமுகவின் பேட்டை ரவுடியா என சந்தேகமாக இருக்கிறது.
ரவுடிகள் பரேடுகள் நடக்கிற இடத்தை போய் ரகுபதி பார்க்க வேண்டும். ரவுடிகளை போல தான் அமைச்சர் பேசுகிறார். ஒரு பேட்டை ரவுடிக்கும் சட்டத்துறை அமைச்சருக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கேரளாவின் குப்பைக் கிடங்கா தமிழகம்? – மருத்துவக்கழிவு கொண்டுவந்த லாரி பறிமுதல்!