மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த பத்ரி சேஷாத்ரியின் கைதை கண்டித்து திமுக அரசை விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 20ஆம் தேதி இரு குக்கி பழங்குடியின பெண்கள் மெய்தி இளைஞர்களால் நிர்வாணமாக்கப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு, நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்சநீதிமன்றம் இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும்.
அங்கு 2 பெண்கள் ஆடைகளை களைந்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக சமீபத்திய யூடியூப் நேர்காணலில் பிரபல பதிப்பாளரும், அரசியல் விமர்சகருமான பத்ரி சேஷாத்ரி, மணிப்பூர் வீடியோ குறித்து பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்து பேசினார்.
அவர், ”மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும். தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம்” என்று பேசியிருந்தார்.
இதனையடுத்து பத்ரி சேஷாத்ரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடூர் கிராமத்தைச் சேர்ந்த கவியரசு என்ற வழக்கறிஞர் பெரம்பலூர் மாவட்ட குன்னம் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன் பேரில், பத்ரியை சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை பெரம்பலூர் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பத்ரி மீது 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல்களை வழங்குதல்), 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), மற்றும் 505 1 (b) (பொதுமக்களுக்கு அச்சம் தரும் வகையில் பேசுவது) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பத்ரி சேஷாத்ரி மீதான கைது நடவடிக்கையை, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், “புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.
சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
WUG: இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தல்!
பட்டாசு குடோனில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!