எனக்கு இருக்கை கொடுக்கவில்லையா?: வட்டாட்சியர் மறுப்பு!

அரசியல்

திருவள்ளூரில் நடைபெற்ற அரசு விழாவில் வட்டாட்சியர் ஒருவருக்கு மேடையில் இருக்கை அளிக்கவில்லை என எழுந்த விவகாரத்தில்,

அந்த வட்டாட்சியரே, அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் என இன்று (ஆகஸ்ட் 19) திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி அரசு சார்பில் பயனாளிகளுக்கான நலத்திட்ட விழா நடைபெற்றது.

இதில், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், அரசு உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணனும் கலந்துகொண்டார்.

ஆனால், அவர் பட்டியல் இனவகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு மேடையில் இருக்கை வழங்கவில்லை என தனியார் நிறுவன தொலைக்காட்சி ஒன்றில் செய்திகள் வெளியாயின.

இதற்கு தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அவர் இன்று (ஆகஸ்ட் 19) பதிவிட்ட ட்விட்டர் பதிவில், “சமூக நீதி, சமத்துவம் எனப் போகும் இடமெல்லாம் தம்பட்டம் அடிக்கும் திமுகவின் முகத்திரைக்குப் பின்னால் இருக்கும் சாதிய கோட்பாட்டை இந்த நிகழ்வு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

இதற்கு முதல்மைச்சரின் பதில் என்ன?” எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

annamalai condemn not giving seats to tahsildar

இந்த நிலையில், இச்செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என வட்டாட்சியர் கண்ணன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், “நான் பட்டியல் இன வகுப்பைச் சார்ந்தவர் என்பதால் மேடையில் உட்கார எனக்கு இருக்கை வழங்கவில்லை என்று தனியார் நியூஸ் சேனல் ஒன்று தவறான தகவலை ஒளிபரப்பி வருகிறது. இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

மேலும், நிகழ்ச்சியில் எனக்கு இருக்கை வழங்கப்பட்டு நான் அதில் அமர்ந்திருந்தேன். விழாவினை எந்தவொரு இடர்ப்பாடின்றி சிறப்பாக நடத்தும் பணியில் செயல்பட்டுக்கொண்டிருந்ததனால்,

விழா மேடையில் நான் எழுந்த சமயத்தினை தவறான நோக்கத்துடன் சித்தரிக்கப்பட்டு, செய்தி பரப்பி மன உளைச்சலை ஏற்படுத்திய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இந்த நிகழ்வில் எவ்வித பாகுபாடோ, தீண்டாமை சம்பவமோ ஏதும் தமக்கு ஏற்படவில்லை” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

நிதிப்பற்றாக்குறையை சொல்லி என் கோரிக்கையை எடப்பாடி ஏற்கவில்லை: அன்புமணி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *