annamalai complain against governer rn ravi

டிஜிட்டல் திண்ணை: நமுத்துப் போன நடைபயணம்… ஆளுநர் மீது அண்ணாமலை புகார்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் ஆளுநர் மாளிகையில் நடக்கவிருந்த சுதந்திர தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்ட பிரேக்கிங் நியூஸ் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டு அரசியலில் ஆளுநர் ஆர்.என்.ரவி மையப்படுத்தப்பட்ட பேசு பொருளாக மீண்டும் மாறியிருக்கிறார்.

ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் திருவண்ணாமலை சுற்றுப்பயணம் சென்ற ஆளுநர் ரவி அங்கே கிரிவலம் சென்றார். அதன்பிறகு அவர் விடுத்த அறிக்கையில் திருவண்ணாமலை கிரிவல சுற்றுப் பாதையில் அசைவ உணவகங்கள் இருக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார். இது சர்ச்சையானது.

அடுத்து ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சேலத்தைச் சேர்ந்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவரின் தந்தை அம்மாசியப்பன் ராமசாமி, ‘நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிக்க போகிறீர்கள்?’ என்று கேட்டார். அவர் தொடர்ந்து கேள்விகள் கேட்டபோது ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அவரது மைக்கை பறித்ததாக சர்ச்சை ஏற்பட்டது.

அவரது கேள்விக்கு பதில் அளித்த ஆளுநர் ரவி, ‘எனக்கு அதிகாரம் இருந்தால் இப்போது அல்ல எப்போதும் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்’ என்று தெரிவித்தார். இதுவும் சர்ச்சையானது. முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஆளுநரை கண்டித்தார்கள்.

இந்த விஷயங்கள் எல்லாம் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவனத்திற்கு சென்றன. நடை பயணத்தின் இடையே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள் அவரிடம், ‘கடந்த சில நாட்களாக ஆளுநர் ரவி தான் ஊடகங்களை முழுமையாக ஆக்கிரமித்து இருக்கிறார்.

நமது நடை பயணம் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் குறைந்துவிட்டன. நீங்கள் ஊர் ஊராக நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஆளுநர் ரவியோ ஆளுநர் மாளிகையில் பாரதியார் ஹால் என்று பெயர் மாற்றப்பட்ட தர்பார் ஹாலில் ஒரு மேடை போட்டு அந்த மேடையிலேயே நடந்து கொண்டு பேசுகிற பேச்சால் உங்களை விட அதிகமாக ஊடகங்களில் வர ஆரம்பித்து விட்டார்’ என்று கூறியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஆளுநர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பது பற்றியும் அரசியல் பேசுவது பற்றியும் அண்ணாமலை பொதுவாக விமர்சித்து இருந்தார். அப்போதே அவர் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை குறித்து கருத்து தெரிவித்திருந்தாலும் அது தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கும் பொருந்துகிற வகையில் இருப்பதாகவே பாஜக நிர்வாகிகள் கூறினார்கள்.

இப்போது ஆளுநரின் தொடர் ஊடக ஆக்கிரமிப்பு பற்றி தனக்கு நெருக்கமானவர்கள் அண்ணாமலையிடம் பேசிய போது, ‘இது பற்றியெல்லாம் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அதாவது தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருக்கிற நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், ‘தேர்தல் வரைக்கும் ஆளுநரை மாற்றாதீர்கள். எங்களுக்கு அவர் பிரச்சார பீரங்கியாக இருக்கிறார்’ என்ற ரீதியில் பேசியிருந்தார். முதலமைச்சரின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நடவடிக்கைகள் பற்றி அண்ணாமலை டெல்லியிடம் புகார் தெரிவித்திருப்பதாக பாஜக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

நிர்வாக ரீதியான எதிர்ப்பு என்பதை தாண்டி அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஆளுநர் சில விஷயங்களை பேசுவது தமிழகத்தில் பாஜகவுக்கு பாதகமாகி கொண்டிருக்கிறது, கட்சி ரீதியான பாஜகவின் நடைப்பயணம் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான முக்கியத்துவத்தை பொதுவெளியில் குறைக்கிறது என்பதை அண்ணாமலை டெல்லிக்கு புகாராக அனுப்பியுள்ளார்”என்று வாட்ஸ் அப் தனது மெசேஜை நிறைவு செய்தது.

தொடர்ந்து ஒரு குறுஞ்செய்தியை டைப் செய்தது வாட்ஸ் அப். “ஆகஸ்ட் 13ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கொச்சியில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 14ஆம் தேதி பகல் அமலாக்கத்துறை, அசோக்கை கைது செய்யவில்லை என்று விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

கேரள பத்திரிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்திலும் விசாரித்த போது… நேற்று இரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் அசோக் குமாரின் கைது பற்றி மறுக்கவும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை. இந்த நிலையில் தான் அந்த தகவல் வெளியிடப்பட்டது. இருப்பினும் நூறு சதவீதம் உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடாமைக்கு வருந்துகிறோம்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்

ஆளுநர் விருந்து ஒத்திவைப்பு… கனமழையா? கண்டன மழையா?

சென்னை மழை: வெள்ளத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சாலை!

+1
1
+1
2
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *