பிரதமர் ரோடு ஷோ குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அவரை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை இன்று (ஏப்ரல் 11) பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பொள்ளாச்சியில் நேற்று பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பிரதமர் மோடியின் ரோடு ஷோவை கடுமையாக விமர்சித்தார்.
ஏறும்போதும், இறங்கும்போது பேட்டி!
அண்ணாமலை குறித்து அவர், “புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். ஃபிளைட்டில் ஏறும்போது பேட்டி கொடுப்பார். இறங்கும்போது பேட்டி கொடுப்பார். இப்படி அவ்வப்போது பேட்டி கொடுத்து மக்களை நம்ப வைத்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார். அது ஒன்றும் தமிழ்நாடு மக்களிடத்தில் எடுபடாது” என்று பேசியிருந்தார்.
மேலும், “விமானத்தில் இருந்து வந்து இறங்கி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? திட்டத்தை கொடுத்து மக்கள் நன்மை பெற்றிருந்தால் ஒரு பிரயோஜனம் உண்டு. அதைவிட்டு டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். ரோட்டில் செல்கிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது. மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா? தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா? அறிவுத்திறன் படைத்தவர்கள். உங்கள் ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது” என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
இது மக்கள் தரிசன யாத்திரை!
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக மாநில தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர், “சாமானிய மக்கள் தங்கள் நேரத்தை கொடுத்து மோடியை பார்க்க வருகிறார்கள். ஒரு பிரதம மந்திரி மக்களை சந்திக்க ரோட் ஷோ வருகிறார்கள். மக்கள் அவரை 6 அடி தூரத்தில் பார்ப்பார்கள். இது தானே ஜனநாயகம்.
இது ரோட் ஷோ என்று சொல்ல கூடாது. இது மக்கள் தரிசன யாத்திரை. மக்களை தரிசிப்பதற்காக எங்கள் தலைவர்கள் வீதிக்கு வந்து செல்கிறார்கள். இது எப்படி தவறாகும்?
ஏன் எடப்பாடி பழனிச்சாமி ரோட் ஷோ போக வேண்டியது தானே? அவர்களுக்கு தெரியும், நாம் சென்றால் மக்கள் வரமாட்டார்கள் என்று. இதனால் ஒரே இடத்தில் பட்டி மாதிரி மக்களை அடைத்து வைத்து, காலை முதல் இரவு வரை எழுத்து மாறாமல் பேப்பரில் உள்ளதை படித்து பிரச்சாரம் செய்கின்றார்கள்” என்றார்.
நரியுன் ஒப்பீடு!
மேலும், “நரியானது மேலே இருக்கும் திராட்சை பழத்தை பறிக்க நினைக்கும். அதை பறிக்க முடியாத பிறகு ‘அந்த பழம் புளிக்கும்’ என்று சொல்லுமாம்.
அதே போன்று வேறு எந்த கருத்தும் சொல்ல முடியாததால், பழம் புளிக்கும் என்று நரி சொல்வது போல் தற்போது ஈபிஎஸ் பேசி வருகிறார்” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக தலைவர்கள் பலரும் அண்ணாமலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.4.2 கோடி மோசடி : ஹர்திக் பாண்டியா சகோதரர் கைது!
‘தெறி காம்போ’ பாலிவுட் சூப்பர் ஸ்டாரை இயக்கும் ஏ. ஆர். முருகதாஸ்
Comments are closed.