ராஜினாமா விவகாரம்: அண்ணாமலை பதில்!

Published On:

| By Selvam

அரசியலை நேர்மையாக நியாயமாக பணம் இல்லாத வகையில் முன்னெடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கும் குஜராத்திற்கும் இடையே கலாச்சார பிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா இன்று (மார்ச் 19) சென்னையில் துவக்கி வைத்தார்.

annamalai comment on his resignation

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அவரிடம் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியை விட்டு விலகுவேன் என்று கட்சி கூட்டத்தில் அவர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “நேர்மையாக நியாயமாக பணம் இல்லாத ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டும்.

இல்லையென்றால் தமிழகத்தில் 1000 ஆண்டுகள் ஆனாலும் மாற்றம் என்பது நிகழாது. நேர்மையான அரசியலுக்கு மக்கள் காத்திருக்கிறார்கள்.

அதனை என்னுடைய கட்சி நிர்வாகிகளிடம் பேச ஆரம்பித்து விட்டேன். இன்னும் வருகின்ற காலத்தில் இதனை மிகவும் ஆக்ரோஷமாக பேசுவேன். எந்த கட்சிக்கும் தலைவருக்கும் நான் எதிரி கிடையாது.

என்னுடைய மனதில் நான் ஐபிஎஸ் அதிகாரி வேலையை விட்டு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று அரசியலுக்கு வந்தேன்.

நான் சில தவறுகளை செய்வதற்கு தயாராக இல்லை. அந்த அடிப்படையில் தான் கட்சி கூட்டத்தில் சில வார்த்தைகளை பேசியிருந்தேன்.

தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு எனக்கு உரிமையில்லை. நான் காவல்துறையில் 9 வருடங்களாக குருவி சேர்ப்பது போல் சிறுக சிறுக சேமித்த தொகை எல்லாம் அரவக்குறிச்சி தேர்தலில் செலவாகி விட்டது. தேர்தல் முடிந்த பிறகு நான் கடனாளியாகத் தான் இருக்கிறேன்.

தமிழக அரசியல் களத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் ரூ.80 கோடி முதல் ரூ.120 கோடி வரை செலவழிக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்துவிட்டு தூய்மையான அரசியலை பற்றி நாம் பேச முடியாது.

மக்களிடம் தனி மனிதனாக சென்று தூய்மையான அரசியலை பேசினால், சிறு துளி பெருவெள்ளம் போல சிறுக சிறுக ஓட்டுக்களை சேகரிப்பேன்.

நான் கூட்டணி குறித்து பேசியதை 50 சதவிகிதம் பேர் சரி என்றும் 50 சதவிகித பேர் தவறு என்றும் பேசுகிறார்கள். எப்படி இருந்தாலும் அது விவாதமாக மாறியுள்ளது.

இது நான் யார் மீதும் வைக்கக்கூடிய குற்றச்சாட்டு இல்லை. அரசியல் மாற வேண்டும். நேர்மையான அரசியல் இங்கு வர வேண்டும். அதற்கு 2024-ஆம் ஆண்டு தேர்தல் அச்சாரமாக இருக்க வேண்டும்” என்று பேசினார்.

செல்வம்

இபிஎஸ் சமுத்திரம்… ஓபிஎஸ் கூவம்: ஜெயக்குமார் காட்டம்!

“அவசர கதியில் பொதுச்செயலாளர் தேர்தல்”: ஓபிஎஸ் தரப்பு வாதம்!

”லூசு பெண்ணே”… எஸ்டிஆர் டான்ஸ் வைரல்!