அண்ணாமலையின் பலமே அதிரடி தான். அது தான் அவருக்கு ஆயிரமாயிரம் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தொண்டர் படை என்று சொல்லாமல், ரசிகர் பட்டாளம் என்று சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. படத்தைப் பார்த்து, காட்சியை ரசித்து, வசனத்தில் ஈர்க்கப்பட்டு, சண்டைக் காட்சியில் மெய் சிலிர்த்துதான் ஒருவன், ஒரு நட்சத்திரத்துக்கு ரசிகனாகிறான்.
அதேபோலத்தான், அண்ணாமலையின் அதிரடி பேட்டி, அதிரி புதிரி அணிவகுப்பு, பல மொழிகளிலான ‘பஞ்ச்’ டயலாக்குகள் இவை எல்லாம் தான், இதுவரை எந்த அரசியல்வாதியையும் ரசிக்காதவர்களையும் ரசிக்க வைத்து, அவருக்கு ரசிகனாக மாற்றியிருக்கிறது.
உண்மையில், நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அவருக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதனால் என்னவோ, அவருக்கு தன்னம்பிக்கையும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
கோயம்புத்துாரில் மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை இதற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள்.
அந்த தரமான ‘சம்பவத்தை’ நம்மிடம் விளக்கினார்கள் சங்க பரிவாரத்தைச் சேர்ந்த சிலர்.
‘‘கோவையில் அண்ணாமலை போட்டியிடுவதை பிஜேபி நிர்வாகிகள் பலரே விரும்பவில்லை என்கிற சேதி, எல்லோருக்கும் தெரிந்தது தான். யார் யார் நமக்கு உண்மையாக வேலை பார்க்கிறார்கள், யார் யார் ஊருக்காகவும், தலைமைக்கும் பயந்தும் நடிக்கிறார்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர் யாரையும் நம்பாமல் தன்னுடைய ஆட்களை வைத்தே, தேர்தல் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து கொண்டிருக்கிறார்.
தன்னை வீழ்த்த நினைப்பவர்கள் மீதான கோபம், அவருக்கு ரொம்பவே இருக்கிறது. என்னதான் அவர் அதைக் கட்டுப்படுத்த நினைத்தாலும், அவரையும் தாண்டி அது வெளிப்பட்டு விடுகிறது.
ஆனாலும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், இந்த விவகாரத்தில் தலையிட்டு சரி செய்ய நினைத்தபோது, அந்த முயற்சிக்கு அவர் ஒத்துழைப்பார் என்று தான் எல்லோரும் நினைத்தார்கள். அதற்காகத்தான், போன திங்கள்கிழமையன்று கோயம்புத்துாரில் காளைப்பட்டி என்ற இடத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் ஒரு முக்கியக் கூட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோயம்புத்துாரில் இரு பிரிவாகப் பிரிந்து நிற்கும் எல்லோரையும் ஒரே அணியில் சேர்த்து தேர்தல் வேலைகளை வேகப்படுத்துவதுதான் அந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பில், ‘விபாக் பிரசாரக்’ என்ற பொறுப்பு, மிகவும் முக்கியமானது. அந்தப் பொறுப்பில் இருப்பவர்கள், ஆறேழு மாவட்டங்களுக்கு தலைமையாக இருந்து சங்க பரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும், பிஜேபி கட்சி நிர்வாகிகளையும் வழி நடத்தும் அதிகாரம் கொண்டவர்கள். அவர்கள் சொல்வதை எல்லோருமே கேட்டாக வேண்டுமென்பதே நியதி. அந்தப் பொறுப்பிலுள்ள அஜய் கோஷ், இந்தக் கூட்டத்தை நடத்த வந்திருந்தார்.
ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள், பிஜேபி நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்கள்.
அதில் அஜய் கோஷ், எல்லோரையும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். அதே கூட்டத்தில் அண்ணாமலையும் கடைசியாகப் பேசினார். அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கேட்க எல்லோருமே ஆவலாக இருந்தார்கள். அவர் எடுத்த எடுப்பிலேயே தன்னுடைய பாணியில் அதிரடியாகப் பேசத்துவங்கினார்.
‘இப்போதே என் கையில் மூன்றரை லட்சம் வாக்குகள் இருக்கின்றன. வெற்றிக்குத் தேவைப்படும் ஒன்றரை லட்சம் வாக்குகளையும் எப்படிச் சேர்க்க வேண்டுமென்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதற்காக என்னுடைய ஸ்டேட்டர்ஜியில் நான் வேலை பார்க்கிறேன். நீங்கள் உங்களுடைய வழியில் வேலைகளைப் பாருங்கள். தென் துருவத்தையும், வடதுருவத்தையும் சேர்ப்பது என்னுடைய வேலையில்லை. நான் இங்குள்ள யாரையும் நம்பி இந்தப் பொறுப்புக்கு வரவில்லை, தேர்தலிலும் நிற்கவில்லை. மோடி ஜியை மட்டுமே நம்பி வந்திருக்கிறேன். அவர் சொன்னபடி கண்டிப்பாக நான் ஜெயித்தும் காட்டுவேன்’ என்று படபடவென்று பேசிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அஜய் கோஷ் உடன் சேர்ந்து சங்க பரிவார நிர்வாகிகள் எல்லோருமே அதிர்ந்து போய் விட்டார்கள். பலரும் உச்சகட்ட அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். அடுத்து வரும் நாட்களில் அவர் எப்படி கட்சியினரையும், சங்க பரிவார அமைப்புகளையும் நடத்துவார் என்பதே பலருக்கும் பெரும் கவலைக்குரிய விஷயமாகவுள்ளது.
மற்ற தொகுதிகளை விட கோயம்புத்துார் தொகுதியில் ஜெயித்தே ஆக வேண்டுமென்ற வெறியோடு திமுகவினரும், அதிமுகவினரும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இவர் இப்படி ‘ஓவர் கான்ஃபிடன்ஸ்’ ஆகப்பேசுவது ஆபத்தானது. அதை அவருக்கு யார் எப்படி உணர்த்தப் போகிறார்கள் என்பதே எங்களுக்குக் கவலையாக இருக்கிறது!’’ என்று நம்மிடம் தங்கள் வருத்தத்தை, அந்த நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர்.
இதுபற்றி கமலாலய வட்டாரங்களில் விசாரித்தபோது,
‘‘அண்ணாமலை அந்த அர்த்தத்தில் பேசியதாகத் தெரியவில்லை. அவர் தனக்குக் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில், சிலவற்றை உடைத்துப் பேசக்கூடியவர். அதே பாணியில் தான் அன்றும் அவர் பேசியிருக்கிறார். மோடி ஜியின் மீதுள்ள மக்களின் நம்பிக்கையும், தன்னுடைய வெளிப்படைத்தன்மையும் தான் இந்தத் தேர்தலில் தனக்கு வெற்றியைப் பெற்றுத்தரும் என்று நம்புவதாகத்தான் பேசியிருக்கிறார்.
சங்க பரிவார அமைப்புகளின் மீது அவர் அளவு கடந்த மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருக்கிறார். அவர் அப்படிப் பேசியிருந்தால், இந்நேரம் அதுபற்றி முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கும். இல்லாததால்தான் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. இதுவும் அவருக்கு எதிரானவர்கள் சிலர் பரப்பும் தகவலாக இருக்கலாம். தேர்தலுக்குப் பின் இதைப் பற்றி விரிவான விசாரணை நடப்பது மட்டும் நிச்சயம்!’’ என்றார்கள்.
அண்ணாமலைக்கு இருக்கும் அளவு கடந்த நம்பிக்கை, அவரைக் கரை சேர்க்குமா, கட்சிக்குக் கறையாகுமா என்பதைத் தெரிந்து கொள்ள நாம் இன்னும் இரண்டு மாதங்களுக்குக் காத்திருந்து தான் ஆக வேண்டும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–பாலசிங்கம்
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை!
கார்ப்பரேட்களும் பாஜகவும் வலுவாக கரம் கோர்த்துள்ளதன் ரகசியம் என்ன?
ஒரு வேளை சங்கிகளின் டார்ச்சர் தாக்கு பிடிக்காம இப்படிக் கொட்டித் தீக்குறாரோ என்னவோ?