சரியான ஆளா இருந்தா என்மேல் கேஸ் போடுங்கள் நான் பார்க்கிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை இன்று (டிசம்பர் 8) சவால் விட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதானி விவகாரம் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை ‘ஜாமீன் அமைச்சர்’ என விமர்சித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம்!
இந்த நிலையில் கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
அவர், “மின்சாரம் கொள்முதல் விசாரணை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளோம். ஆனால் அந்த அறிக்கையை படித்த பின்னும் அதனை புரிந்து கொள்ளாமல் ஒருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தெரிந்தவர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்ள பக்குவமும் இல்லை.
7 ரூபாய் 1 காசு என்பது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு நிலுவையில் உள்ளது. ஏதோ எங்கள் அரசு ஒப்பந்தம் போட்டது போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
ஜாமீன் அமைச்சர் என சொல்லி இருக்கிறார். பாஜகவில் எத்தனை பேர் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் அமைச்சர்களாக இருக்கிறார்கள்” என்றார்.
அண்ணாமலையை மட்டும் பெரிதுபடுத்துவது ஏன்?
மேலும், “பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆண்டுதோறும் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்கின்றனர். ஊடகங்கள் அது குறித்து பேசுவதில்லை. ஆனால் ஒரு நபரைப் பற்றி மட்டும் செய்தி வெளியிடுகின்றனர். மத்திய அரசு தேர்வு செய்து லண்டனுக்கு அனுப்பிய 11 நபர்களில் அண்ணாமலையும் ஒருவர். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஐஏஎஸ்ஸும் சென்றார். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு அண்ணாமலை போனதை மட்டும் வரிந்து கட்டி செய்தி போட்டார்கள். அவரை மட்டும் பெரிதுபடுத்துவது ஏன்?” என செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் கோவையில் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசினார்.
நியாயத்தை கேட்டால் மிரட்டலா?
அவர், “ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்து, பலமுறை ஜாமீன் மறுக்கப்பட்டு, அவரது சொந்த தம்பி, அவர் கட்சி ஆளக்கூடிய மாநிலத்தில் தலைமறைவாக இருக்கிறார். அவரை தான் பெஸ்ட் அமைச்சர் என்று முதல்வர் சொல்கிறார். அவருக்கு ஏன் இவ்வளவு வேகமாக அமைச்சர் பதவி கொடுத்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அப்படி என்றால் நான் ’ஜாமீன் அமைச்சர்’ என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
அதானியுடன் ஒப்பந்தம் நீங்கள் போடவில்லை அதிமுக போட்டது என சொல்கிறீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் அதானிக்கு 77 கோடி ரூபாய் கொடுத்தீர்களே? அதை ஏன் மறைத்தீர்கள்? இதற்கு உருட்டல் மிரட்டலுடன் என் மீது கேஸ் போடுவார்களாம்? நியாயத்தை கேட்டால் மிரட்டலா? அமலாக்கதுறை வழக்கில் உள்ள போன நீங்கள் எல்லாம் கேஸ் போட்டு என் மீது எஃப்.ஐ.ஆர் போடவேண்டும் என்பது என் தலைவிதி.
பொறாமைப்படுவது சகஜம் தான்!
ஆக்ஸ்போர்டுல எனக்கு மட்டும் தனியாகவா வகுப்பு எடுப்பார்கள்? அண்ணாமலையுடன் கூட போன 11 பேரின் ரகசியம் எனக்கு தெரியும் என்கிறார்கள். ஆக்ஸ்போர்டு வெப்சைட்டிலேயே அந்த 11 பேர் குறித்த தகவல் புகைப்படத்துடன் உள்ளது. இது என்ன விஞ்ஞான கண்டுபிடிப்பா?
நான் ஆக்ஸ்போர்டு சென்று படித்த நேரத்தில், ஜாமீன் அமைச்சர் புழல் சிறையில் கம்பி எண்ண படித்து கொண்டிருந்தார். ஃபெயில் ஆன மாணவன் பாஸ் ஆன மாணவனை பார்த்து பொறாமைப்படுவது சகஜம் தான்.
என்மேல் கேஸ் போடுங்கள்!
கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் சுத்தி சுத்தி பேச வேண்டாம்.
ஜாமீன் அமைச்சருக்கு நான் சவால் விடுக்கிறேன். நீ ஒரு அப்பா, அம்மாவுக்கு பிறந்தவரா இருந்தா? சரியான ஆளா இருந்தா? என்மேல் கேஸ் போடுங்கள் நான் பார்க்கிறேன். ஜெயிலில் இருக்குற அமைச்சர் சொல்ற அளவுக்கு அரசியல் மோசமாகிவிட்டதா? உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுகிறவன் நான் இல்லை. இந்த மாறி ஆளை எல்லாம் ஓட விடனும் என்பதற்காக தான் தவமாய் அரசியலுக்கு வந்துள்ளேன்” என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”நூல் வெளியிட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்க சொன்னதே நான் தான்” : திருமாவளவன்
ஆஸ்திரேலியாவின் அபார வெற்றியால் இந்தியா பின்னடைவு! மோசமான சாதனை பட்டியலில் ரோகித்
Comments are closed.