திராணி இருந்தால்… : தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை சவால்

Published On:

| By christopher

தன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ’திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்’ என தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை சவால் விட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வடஇந்திய தொழிலாளா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக தவறான செய்திகள் பரவி வந்தன.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் பீகார், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநில முதல்வா்கள், உயரதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் இடையே தொடர்ந்த் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஹோலி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதற்காக வடஇந்திய தொழிலாளா்கள் ரயில் நிலையங்களில் குவிந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த வீடியோக்கள் அனைத்தும் பொய்யானது என்று டிஜிபி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் மறுத்து வந்தனர். தொடர்ந்து, முதலமைச்சரும் இச்செய்திக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் வதந்தி பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி சமூக வலைதளங்களில் முதலில் போலியான வீடியோக்களை வெளியிட்ட பாஜக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களை கைது செய்ய தனிப்படையும் டெல்லி விரைந்துள்ளது.

அதேபோல் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளும் இதுகுறித்து தமிழ்நாட்டிற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு படையெடுப்பதற்கு காரணம் திமுக தான் என்றும், அவர்களின் இந்தி எதிர்ப்பு போராட்டமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வட மாநில தொழிலாளர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பேசி வருவதும் தான் காரணம் என்று தான் வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் ஹோலி பண்டிகை காரணமாகத் தான் ஊருக்கு செல்வதாகவும், தமிழ்நாட்டில் பாதுகாப்புடன் இருக்கிறோம், எங்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்று வட மாநிலத்தவர்கள் சிலர் செய்தியில் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டு இருந்த அறிக்கையில், அவதூறு தகவலை பரப்பும் வகையில் கருத்துகள் இடம்பெற்று இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திராணி இருந்தால் கைது செய்யட்டும்

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ’திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும்’ என தமிழக அரசுக்கு பாஜக அண்ணாமலை சவால் விட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையே காணொளியாகவும் வெளியிடுகிறேன்.

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் அண்ணாமலை, இவ்வாறு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போது பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

போக்சோவில் கைதான அதிமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்!

செந்தில்பாலாஜியுடன் அண்ணாமலை டீல்: பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் அதிமுகவில் இணைந்தார்

அவர் விளையாடாதது மகிழ்ச்சியே: ஸ்ரீகாந்த் ஓபன் டாக்!

annamalai challenge tamilnadu police