இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரம்… திமுக – பாஜகவினர் மோதல்!

Published On:

| By Selvam

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரவு 10.40 மணிக்கு பிரச்சாரம் செய்ததால், திமுக கூட்டணி கட்சியினர் மற்றும் பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

தமிழக தேர்தல் பிரச்சாரம் அனல் வீசுகிறது. மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி என தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்துள்ளனர்.

கோவை தொகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதி அந்தஸ்தை பெற்றுள்ளது. திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் களமிறங்குகின்றனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (ஏப்ரல் 11) சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இரவு 7.45 மணியளவில் ஆவாரம்பாளையம் பகுதியில் வாக்குசேகரிக்க திட்டமிட்டிருந்தார்.

இதனால் 7 மணியிலிருந்தே அப்பகுதியில் பாஜகவினர் குவிந்தனர். ஆனால், அண்ணாமலை ஆவாரம்பாளையம் பாயின்ட்டுக்கு வர தொடர்ந்து தாமதமானது. இரவு 10.40 மணிக்கு தான் ஆவாரம்பாளையம் பகுதிக்கு வந்தார்.

இதனையடுத்து தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்வதாக அங்கிருந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி  நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

மேலும், அண்ணாமலை பிரச்சாரம் செய்வதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு பாஜகவினர் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அண்ணாமலை சம்பவ இடத்திலிருந்து தனது காரில் புறப்பட்டு சென்றார். வாக்குவாதம் முற்றவே, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில் மதிமுகவை சேர்ந்த குணசேகரனுக்கு நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக, திமுக கூட்டணி கட்சியினர் மோதிக்கொண்ட சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஹெல்த் டிப்ஸ்:  அசிடிட்டி… அலட்சியம் வேண்டாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel