Annamalai broke the silence

டிஜிட்டல் திண்ணை: மௌனம் கலைத்த அண்ணாமலை- எடப்பாடி ரியாக்‌ஷன்! சமரச தூதர் வாசன்

அரசியல்
வைஃபை ஆன் செய்ததும் கோவையில் அண்ணாமலை கொடுத்த பிரஸ்மீட் வீடியோ லிங்க் இன்பாக்சில் வந்து விழுந்தது. அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் சில உரையாடல்களை நடத்திவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
 “செப்டம்பர் 17 ஆம் தேதி கோவையில் சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  அன்று இரவு புறப்பட்டு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கும் தன் வீட்டுக்குச் சென்றார். அண்ணாமலையின் பேட்டியால் கடும் கோபமான எடப்பாடி பழனிசாமி மறுநாள் விநாயகர் சதுர்த்தியன்று ஜெயக்குமார் மூலமாக அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற அறிவிப்பை திட்டவட்டமாக வெளியிட்டார். இதனால்  பாஜக மேலிடமே சற்று அதிர்ந்தது.
கூட்டணி குறித்து தமிழக பாஜகவில் இருந்து யாரும் கருத்து கூறக் கூடாது என்று உத்தரவு போட்டது.  இதனால் ஆவேசமாக பேசிவிட்டு வந்த அண்ணாமலை சென்னையில் உள்ள தன் வீட்டை விட்டு கூட வெளியே வராமல் 3 நாட்கள் அமைதி காத்தார். இன்று  (செப்டம்பர் 21)  காலை பனையூரில் தன் வீட்டில் இருந்து புறப்பட்டார்.
கூட்டணி முறிவு குறித்து தமிழக பாஜக தலைவர் என்ற வகையில் அவரது கருத்தை அறிய  தொலைக்காட்சி ஊடகச் செய்தியாளர்கள் காரில் அமர்ந்திருந்த அண்ணாமலையை அணுகினார்கள். கார் கண்ணாடியை இறக்கிவிட்ட அண்ணாமலை, ‘நீங்க சாப்டீங்களா? என் வீடு தேடி வந்திருக்கீங்க. அதனால கேட்குறேன்’ என்றார்.  நிருபர்கள் கூட்டணி குறித்து கேட்க, ‘உங்க சேனல் ரன் பண்றதுக்கு நான் பேட்டி கொடுக்கணுமா? பேச வேண்டிய நேரத்துல பேசுவேன்’ என்று கோபமாக கூறிவிட்டுச் சென்றார்.
அதன் பின் விமான நிலையம் சென்று கோவை சென்ற அண்ணாமலை கோவையில் பிற்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘ அண்ணாவை நான் அவமரியாதையாக பேசவில்லை. பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பிரச்சினை இல்லை. எனக்கும் சில அதிமுக தலைவர்களுக்கும் பிரச்சினை இருக்கலாம். ஆனால் அந்த பிரச்சினை என்னால் இல்லை. நான் இப்படித்தான் ஆக்ரோஷமாக இருப்பேன். நான் ஒரு ரிபல். நான் பாஜகவை தமிழ்நாட்டில் ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன். கூட்டணி என்றால் முட்டல் மோதல் எல்லாம் சகஜம்தான்’ என்று சகட்டு மேனிக்கு முரண்பாடுகளின் மூட்டையாக பேசினார்.
அண்ணாமலையின் இந்த பேட்டியை டிவியில் பார்த்த எடப்பாடி பழனிசாமி வாய் விட்டு சிரித்ததாக சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.  ‘அண்ணாமலையை வைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறார் எடப்பாடி. இதை பாஜக சீனியர்களிடமே சொல்லியிருக்கிறார். அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார். அன்று அவ்வளவு பக்குவம் இல்லாமல் பேசிவிட்டு மூன்று நாட்கள் முடங்கிய அண்ணாமலை மீண்டும் அதே பாதையிலேயே செல்கிறார். நாம் பாஜக மேலிடத்தைத் தாக்கவில்லை. அண்ணாமலைதான் வேண்டாம் என்கிறோம். விரைவில் பாஜக தேசிய தலைமையில் இருந்து எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார்கள்’ என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.
இதற்கிடையே  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தமிழ்நாட்டில் நிலவும் கூட்டணிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி  கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். தேசிய தலைவர்களிடமும் பேசியிருக்கிறார். இந்த நிலையில் இன்று ( செப்டம்பர் 21)  காங்கேயத்தில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலையை வாழ்த்த, தன் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான விடியல் சேகரை அனுப்பி வைத்தார் வாசன்.
பாஜகவோடு அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவித்த நிலையில்  அண்ணாமலையின் நடைப் பயணத்துக்கு தனது கட்சிப் பிரமுகர் விடியல் சேகரை அனுப்பி வைத்திருக்கிறார் வாசன். அப்படியென்றால் வாசன் அண்ணாமலையின் பக்கம் சாய்கிறாரா என்று விசாரித்தால்… ‘அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே சமரச தூதராக வாசன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். வாசனுக்கு எம்பி பதவி தந்தது அதிமுகதான். அதேநேரம் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கௌரவமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று வாசன் கருதுகிறார். அதனால் அதிமுக-பாஜக கூட்டணிக் குழப்பங்களைத் தீர்த்து வைப்பதில் இருவருக்கும் இடையே தொடர்புப் பாலமாக இருக்கிறார் என்கிறார்கள் தமாகவினர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
+1
0
+1
9
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

2 thoughts on “டிஜிட்டல் திண்ணை: மௌனம் கலைத்த அண்ணாமலை- எடப்பாடி ரியாக்‌ஷன்! சமரச தூதர் வாசன்

  1. அண்ணாமலையின் வளர்ச்சியை பார்த்து பயப்படும் பழனிசாமி என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும், அண்ணாமலையை ஒன்றும் செய்ய முடியாது! பழனிசாமியே தனக்கும், அதிமுகவுக்கும் தமிழ் நாட்டில் சொந்த செலவில் சூன்யம் வைத்து விட்டார்! மக்கள் விழித்து கொண்டு விட்டார்கள்! இனி தமிழ் நாட்டில் பிஜேபி சுனாமி தான்!

  2. ஜி கே வாசன் பாஜக அதிமுகவின் ஊது குழல் அதிமுகவின் தயவு எம்பி ஆனவர் அவருக்கு தெரியும் அதிமுகவின் தயவு இல்லை என்றால் பாஜக சுடுகாட்டுக்கு போய்விடும் தமிழ்நாட்டில் இன்று தேர்தல் கார்களில் காங்கிரஸ் கொடி போல் ஒன்று பறக்க வேண்டும் என்பதற்காக ஜி கே வாசனையை கூட்டு வைத்துள்ளது அதிமுக இரண்டு கட்சிகளின் பினாமியாக உள்ளார் ஜி கே வாசன் என்று மக்களால் கூறப்படுவது உண்மை நன்கு மந்திரி பதவியை அனுபவித்துவிட்டு பாஜக சொல் படிதனி கட்சி ஆரம்பித்தவர் ஜி கே வாசன். பேர ஊழல் என்று ஒரு போடு போட்ட உடனே காங்கிரசை விட்டு விலகியவர் ஜி கே வாசன் இவர் தற்போது இருக்கும் கூட்டணி விளங்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *