நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 21) தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள், அமமுக 2, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
“தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை முடித்துள்ளோம். பாஜக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர்.
மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் 4 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 24 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலோடு இன்று புதுடெல்லி செல்ல இருக்கிறோம். இன்று மாலை முதல் எந்தநேரத்திலும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம்.
அனைத்து கட்சிகளும் வளரவேண்டும் என்பது நம்முடைய நோக்கம், யாரையும் நெருக்கி பாஜக வளர விரும்பவில்லை. திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. அதற்கு இந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று அறிவிப்பார்” என அண்ணாமலை தெரிவித்தார்.
நேற்று (மார்ச் 20) கமலாலயத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்ற ஜி.கே.வாசன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால், கையெழுத்திடாமல் வந்துவிட்டனர்.
தமாகா தஞ்சாவூர், மயிலாடுதுறை, ஈரோடு ஆகிய தொகுதிகளை விரும்பியது. ஆனால், தஞ்சை தொகுதி அமமுகவுக்கும், மயிலாடுதுறை தொகுதி பாமகவுக்கும் ஒதுக்கியாகிவிட்டது என அண்ணாமலை கூறிவிட்டார். அதனால், தமாகா கேட்கும் தொகுதிகளில் தற்போது ஈரோடு மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் வாசன்.
அதேபோல, ஓபிஎஸ் தனது இளைய மகன் ஜெயபிரதீப்புக்காக சிவகங்கை தொகுதியை கேட்டார். சிவகங்கை தொகுதியில் தான் சார்ந்த சமுதாய உட்பிரிவு மக்கள் அடர்த்தியாக இருப்பதால் அந்த தொகுதியை குறிவைத்தார் ஓபிஎஸ். ஆனால், பாஜக தரப்பில் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
மேலும், சின்னம் தொடர்பான விவகாரத்திலும், பன்னீருக்கு சாதகமாக எந்த விஷயமும் நடக்கவில்லை. இந்நிலையில், இன்று (மார்ச் 21) ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில் பாஜக கூட்டணியில் எத்தனை தொகுதி பெறுவது என முடிவெடுக்கும் அதிகாரத்தை பன்னீருக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அண்ணாமலை பாஜகவின் வேட்பாளர் பட்டியலோடு டெல்லியில் செல்ல தயாராகும் நிலையில், பாஜகவுக்கு நிபந்தனையின்றி ஆரம்பத்திலிருந்தே ஆதரவளித்த ஜி.கே.வாசனுக்கும், ஓபிஎஸ்ஸூக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படாதது அவரது ஆதரவாளர்களிடம் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL: ஆபா்களை வாரி ‘வழங்கி’… வள்ளலாக மாறிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!
“ரயில் டிக்கெட் வாங்க கூட காங்கிரசிடம் நிதி இல்லை”: மோடி மீது சோனியா, ராகுல் புகார்!
விரக்தி இல்லை கடுகோபம்…..