அதிமுகவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த உட்கட்சிப் பூசலின் உச்சகட்டமாக ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்தே நீக்கிவிட்டார்கள்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு எடப்பாடி நன்றியும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று (ஜூலை 13) செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், “எடப்பாடி, பன்னீர்செல்வம் யாருக்கு உங்கள் ஆதரவு?” என்ற ரீதியில் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் சார்பில் வாழ்த்து தெரிவித்தேன். எங்களுக்கு அதில் விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. விருப்பு வெறுப்பு இல்லாமல்தான் நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம். இந்தியா முழுவதுமே விருப்பு வெறுப்பைப் பார்க்க ஆரம்பித்தோம் என்றால், அது ஜனநாயகத்துக்கு எதிரானதாகத்தான் இருக்கும். பிஜேபி எப்போதும் அதில் போகாது.
பிஜேபியின் கதவுகள் எல்லோருக்குமே திறந்திருக்கிறது. கூட்டணி என்பது இருதரப்புக்கும் வலுவானது. கூட்டணிக்கு என்று ஒரு தர்மம் இருக்கிறது. நம் கூட்டணியில் இல்லாத ஏழு கட்சிகள் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருமே எனக்கு நல்ல பிரியமான மனிதர்கள்தான்.இருவரையும் தாண்டி அதிமுக என்ற கட்சியுடன் தான் கூட்டணி வைத்திருக்கிறோம். தலைவர்களுடன் அல்ல. ஆனால் ஒரு கட்சிக்கு தலைவர் என்பது அது அந்தக் கட்சியின் முடிவாகும். அந்த முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது எங்களது கடமை” என்றார்.
–ஜெ.பிரகாஷ்