“அண்ணாமலைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”: பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமிற்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.
கட்சியில் சீனியர்களுக்கு எதிராக அவர் செயல்படுவதாகவும், அண்ணாமலை வந்த பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்து வந்தார்.
இந்த நிலையில் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜனவரி 3 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்
”என்னுடைய கருத்தை சொல்ல, பிரச்னையை விசாரணை செய்ய, சம உரிமை வழங்க, பெண்களுக்கு மரியாதை வழங்க கூட முடியாத பாஜகவில் இருந்து விலகுகிறேன்.
அண்ணாமலைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, நான் கட்சியில் இருந்து கிண்டல் செய்யப்படுவதற்கு கட்சியில் இல்லாமல் கிண்டல் செய்யப்படுவது மேல்.
கட்சி தொண்டர்கள் பற்றி யாருமே இங்கு கவலைப்படவில்லை.
அண்ணாமலையின் ஒரே குறிக்கோள் உண்மையான தொண்டர்களை வெளியே அனுப்புவதுதான். பிரதமர் மோடி தலை சிறந்த தலைவராக இருப்பார். அமித் ஷா எப்போதும் என்னுடைய சாணக்கிய குருவாக இருப்பார்.
நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.
கடந்த 8 வருடங்களாக என்னுடன் வேலை பார்த்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி, அவர்கள் என்னுடன் அன்பாக இருந்தனர், எனக்கு மரியாதை கொடுத்தனர், அது ஒரு சிறந்த பயணம். மற்றவர்களை அவமானப்படுத்துவது இந்து தர்மம் கிடையாது.
நான் அண்ணாமலை தலைமைக்கு கீழ் இயங்க முடியாது. இங்கே சமூக நீதி இல்லை. பெண்களே பாதுகாப்பாக இருங்கள், மற்றவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம், யாரும் உங்களுக்காக வர மாட்டாரக்ள்.
நீங்கள் தனித்து இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது, உங்களை யாரும் மதிக்கவில்லை என்றால் அங்கே நீங்கள் இருக்க கூடாது, உங்களை நீங்கள் நம்புங்கள்.
வீடியோ, ஆடியோ அனைத்தையும் வெளியிடும்படி நான் போலீசில் புகார் அளிக்க உள்ளேன்.
அண்ணாமலைக்கு எதிராக விசாரணை நடத்த சொல்ல இருக்கிறேன். அவர் மோசமான நபர். எனக்கு எதிராக டிரெண்ட் செய்யும் வார் ரூம் பற்றியும் புகார் கொடுப்பேன், என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா : மதுர் தட்டை
பொங்கல் விடுமுறைக்கு எத்தனை சிறப்பு பஸ்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று ஆலோசனை!