வைஃபை கனெக்ட் செய்ததும், “ஃபேஸ்புக் மெசஞ்சர் சில புகைப்படங்களை அனுப்பிவிட்டு… சில கேள்விகளையும் தொடுத்திருந்தது.
அந்த படங்களைப் பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்குமான இடைவெளி ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்கான சம்பவங்கள் சமீப நாட்களாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
அதிமுகவில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து உட்கட்சிப் பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது. ஆனபோதும் தமிழக பாஜக இதில் பெரிதாக தலையிட்டது போல காட்டிக் கொள்ளவில்லை. கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டே நீக்கினார் எடப்பாடி.
இந்த நிலையில் ஜூலை 13 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘ அண்ணன் எடப்பாடி பழனிசாமி, அண்ணன் ஓ.பன்னீர் செல்வம் இரண்டு பேருமே எனக்குப் பிரியமானவர்கள்’ என்றும், அதிமுகவுடன் தான் கூட்டணி வைத்திருக்கிறோமே தவிர அதிமுக தலைவர்களோடு கூட்டணி வைக்கவில்லை என்றும் கூறினார். எடப்பாடிதான் அதிமுக, அதிமுகதான் எடப்பாடி என்று எடப்பாடியின் ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில்தான் எடப்பாடி, பன்னீர்செல்வம் மட்டுமே அதிமுக இல்லை என்பது போல பதிலளித்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உறுத்திக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலை ஒட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை தனது வீட்டில்தான் முதலில் கூட்டினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்றத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. முதலில் இதை எடப்பாடி விரும்பவில்லை. ‘அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாஜக தலைவர்கள் கலந்துகொண்டால், அதுவும் என் வீட்டில் நடக்கும்போது கலந்துகொண்டால் சரியாக இருக்காது’ என்று சொல்லிய எடப்பாடி அதனாலேயே கூட்டத்தை ஹோட்டலுக்கு மாற்றியிருக்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது எப்படி என்பதை விளக்குவதற்காகத்தான் பாஜக தலைவர்கள் வருகிறார்கள் என்று எடப்பாடியிடம் சொல்லப்பட்டது. அப்போது, ‘நயினார் நாகேந்திரன் சீனியர் சட்டமன்ற உறுப்பினர். அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது பற்றி சொன்னால் சரியாக இருக்கும், வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.பாஜகவின் தேசியப் பொறுப்பிலும் இருக்கிறார். இவர்கள் வேட்பாளரின் முகவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அண்ணாமலை வரவேண்டிய அவசியமில்லையே… அவர்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சென்னைக்கு வரும்போதே நம்மை சந்தித்துவிட்டாரே? எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அண்ணாமலை எதற்கு?’ என்ற கேள்வி எடப்பாடியின் நெருங்கிய வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டது. இது பாஜகவுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் அண்ணாமலை இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இந்த சம்பவத்தின் மூலம் அண்ணாமலைக்கும் எடப்பாடிக்குமான உறவில் பிரச்சினை இருப்பது தெளிவாக தெரிகிறது என்கிறார்கள் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும்.
மேலும் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையை பிடித்ததை அண்ணாமலை ரசிக்கவில்லை. எடப்பாடி ஒற்றைத் தலைவரானால் கொங்கு பகுதிகளில் அவரது செல்வாக்கு உயரும், கொங்குவில் தன்னால் தொடர்ந்து அரசியல் செய்வது கஷ்டமாகும் என்று நினைக்கிறார் அண்ணாமலை. அதிமுகவில் யார் தலைவராக இருந்தாலும் ஒற்றைத் தலைவராக இருந்தால் அது பாஜகவுக்கு நல்லதல்ல என்ற கருத்தின் நீட்சியாக குறிப்பாக கொங்குவில் எடப்பாடி வளர்வதை அண்ணாமலை ரசிக்கவில்லை என்கிறார்கள்.
மேலும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட விஷயத்தில் மத்திய அரசை அவர் குறை கூறியிருக்கிறார். திமுக அரசை விமர்சிக்கும் அளவுக்கு காரசாரமாக மத்திய அரசை விளாச வில்லை என்றாலும் ஏழை, எளிய நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சமீப ஆண்டுகளில் அதிமுகவின் இந்த அணுகுமுறை புதிதாக பார்க்கப்படுகிறது. ஜூலை பொதுக்குழுவில் பெரியாருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் எடப்பாடி என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில்தான் அண்ணாமலை திடீரென டெல்லி சென்று வந்து சென்னையில் 21 ஆம் தேதி ஆளுநரை சந்தித்திருக்கிறார். எடப்பாடியும் டெல்லி புறப்பட்டிருக்கிறார். அதிமுக -பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தல் வரை இருக்கிறது என்ற நிலையிலும் அடுத்தடுத்த தேர்தல்களில் தொடருமா என்ற கேள்வியை எடப்பாடியின் செயல்பாடுகள் எழுப்பியுள்ளன. எடப்பாடியைச் சுற்றியிருக்கும் ரெய்டு வலைகள், அண்ணாமலையின் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு இடையேதான் டெல்லி சென்றுள்ளார் எடப்பாடி