வைஃபை ஆன் செய்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை ஒட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த ட்விட்டர் பதிவுகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
சில வாழ்த்துகளைத் தேடித் தேடி பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 39 ஆவது பிறந்தநாள் ஜூன் 4 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதேநேரம் ஜூன் 3 ஆம் தேதி இரவே அண்ணாமலை தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு ஒரு ஆடியோ மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், ‘எனது பிறந்தநாளுக்காக நாளை சில நிகழ்ச்சிகளுக்கு சகோதர சகோதரிகள் ஏற்பாடு செய்துள்ளதாக அறிகிறேன்.
ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தை ஒட்டி பலர் இறந்துபோன துக்க கரமான நிலையில், எனது பிறந்தநாளை கொண்டாட நான் விரும்பவில்லை. அதனால் நிகழ்ச்சிகள் ஏதும் நடத்திட வேண்டாம். உங்களது ஆசீர்வாதங்கள் மட்டும் போதும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்றாலும்.., சமூக தளங்களிலும் நேரிலும் அண்ணாமலையை பலர் வாழ்த்தியிருக்கிறார்கள்.
அரசியல் தலைவர்களின் பிறந்தநாளின்போது சக அரசியல் தலைவர்கள், சக கூட்டணித் தலைவர்கள் வாழ்த்து சொல்வது அரசியலில் வழக்கம்தான். ஏன் எதிரெதிர் நிலைப்பாட்டில் இருக்கும் தலைவர்கள் கூட இதுபோன்ற தனிப்பட்ட தருணங்களில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதுதான் அரசியல் நாகரிகம்.
ஆனால் ஜூன் 4 ஆம் தேதி அண்ணாமலையின் பிறந்தநாளுக்கு கூட்டணிக் கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே வாழ்த்து தெரிவிக்கவில்லை. இன்னமும் பாஜக தயவு தேவைப்படுபவராக இருக்கும் ஓபிஎஸ் கூட அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் என்ற முறையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கூட அண்ணாமலைக்கு வெளிப்படையாக பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கவில்லை.
கூட்டணித் தலைவர்களில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர்தான் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். மேலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஆக அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இன்னமும் சுமுகமான உறவு திரும்பவில்லை என்பதையே அண்ணாமலையின் பிறந்தநாளுக்கு எடப்பாடி வாழ்த்து சொல்லாதது எடுத்துக் காட்டுகிறது என்கிறார்கள் அதிமுகவில்.
எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ‘அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஜூன் 4 ஆம் தேதி காலை அண்ணாமலைக்கு வாழ்த்து சொல்ல காத்திருந்தார்கள். ஆனால் அன்று எடப்பாடியிடம் இருந்து எந்த அறிக்கையும் வாழ்த்துப் பதிவும் வரவில்லை என்பதால் அவர்களும் அப்படியே விட்டுவிட்டார்கள்.
ஜூன் 2 ஆம் தேதி ஆளுநர் தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஜூன் 4 ஆம் தேதி அண்ணாமலைக்கு பிறந்தநாள் என்று தெரிந்தும் அமைதியாகத்தான் இருந்தார்.
அண்ணாமலை சக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் காட்டிவரும் அணுகுமுறைக்கான விளைவாகவே இது பார்க்கப்படுகிறது. சமீபத்தில் டெல்லி சென்று அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கே அண்ணாமலையும் அமர்ந்திருந்தார்.
இந்த சந்திப்புக்குப் பின் தமிழகத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள் அதிமுக தலைவர்களை பழையபடிக்கு எள்ளி நகையாடினார்கள். இதெல்லாம் எடப்பாடிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அண்ணாமலைக்கு எந்த அளவுக்கு இணக்கம் இருக்கிறது என்பதற்கான சாட்சியாக அவரது பிறந்தநாளே அமைந்திருக்கிறது.
தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் அவரை வாழ்த்த கூட்டணிக் கட்சித் தலைவர்களே தயங்குவது பற்றி பாஜக தேசிய தலைமைதான் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்கிறார்கள்.
வரும் ஜூன் 11ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரும் நிலையில்… அண்ணாமலை பிறந்தநாளை ஒட்டி அதிமுக-பாஜக பஞ்சாயத்து மீண்டும் தொடங்கியிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செக்ஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வீடன் விளக்கம்!
மதுபாட்டில்களில் சிறுமியின் படம்: விஜயகாந்த் வலியுறுத்தல்!