மோசடி புகாரை திசைதிருப்பும் அண்ணாமலை: திமுக தலைவர்கள் குற்றச்சாட்டு

அரசியல்

பாஜகவின் மீதான பல்வேறு மோசடி புகார்களை திசைதிருப்பும் நோக்கில் அண்ணாமலை திமுக மீது குற்றஞ்சாட்டியுள்ளதாக திமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திமுகவினரின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ம் தேதி (இன்று) வெளியிடப்போவதாக கூறி வந்தார்.

அதன்படி, திமுகவினரின் சொத்து பட்டியல் குறித்த விவரங்களை அவர் இன்று வெளியிட்டார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நெருக்கமானவர்கள் என பலரின் சொத்து மதிப்புகள் சுமார் 1.31 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இருப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அடுத்தக்கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து திமுகவின் மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்படி நடவடிக்கை

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “முதல்வரை களங்கப்படுத்தும் அண்ணாமலையின் எண்ணம் நிறைவேறாது. திமுக சொத்துப் பட்டியலுக்கான ஆதாரங்களை 15 நாளில் அவர் வெளியிட வேண்டும். இல்லையென்றால் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அரசியல் ஸ்டண்ட்.. அவ்வளவு தான்!

வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், “எல்லாம் அரசியல் ஸ்டண்ட்… அவ்வளவு தான்!” என்று தெரிவித்தார்.

அரசியலில் தக்க வைக்க பேச்சு

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது திமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கனிமொழி, ”சிலர் அரசியலில் அவர்களது நிலையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தவறான விஷயங்களை பேசி வருகிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.” என்று கூறினார்.

மோசடி புகாரை திசைதிருப்பும் முயற்சி

அதேபோல் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் பேசுகையில், ”தமிழ்நாட்டில் இப்போது மிகப்பெரிய நிதி மோசடி நடந்துள்ளது. அதில் தமிழக பாஜகவை சேர்ந்த தலைமை நிர்வாகிகளுக்கு தொடர்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதனை திசைதிருப்புவதற்காகவே அண்ணாமலை திமுக மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன்மூலம் மக்களின் எண்ண ஓட்டத்தை திசைதிருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார்.

அனைவரும் சிரிக்கக்கூடிய அளவிற்கு பாஜகவின் ஊழல் பட்டியல் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் போஸ்டர் அடித்து ஓட்ட வேண்டியதற்கு என்ன இருக்கிறது?

ஆங்கிலத்தில் ‘அட்டென்சன் சீக்கிங் சிண்ட்ரோம்’ என்று சொல்வார்கள். அதாவது மற்றவர்கள் முன்னால் தங்களது இருப்பைக் காட்டி கொள்வதற்காக சிலர் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதை தான் இப்போது அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

என் மீது பிரதமர் மோடிக்கு கோபமா? : அண்ணாமலை

KKR vs SRH : உத்தேச ஆடும் 11 வீரர்கள்!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *