பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 3) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார்.
நேற்று டெல்லியில் பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில், இன்று காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்தார்.

அதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். இந்த இரண்டு சந்திப்பின் போதும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி அண்ணாமலையுடன் இருந்தார்.
டெல்லி மேலிட தலைமை அறிவுறுத்தியதன்படி இரண்டு தரப்பையும் இணைக்கும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளதாகவும் ஒருங்கிணைந்த வேட்பாளரை இடைத்தேர்தலில் நிறுத்த இரண்டு தலைவர்களையும் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதாக இருந்தது.
அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாலும், இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவின் விசாரணை இன்று வர உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரண்டு தரப்பு தலைவர்களையும் சந்தித்த அண்ணாமலை, கமலாலயம் சென்று தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்