கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி, பாஷா இறுதி ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியதைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் இன்று (டிசம்பர் 20) நடைபெற்ற கருப்பு தின பேரணியில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 1998-ஆம் ஆண்டு கோவையின் வெவ்வேறு இடங்களில் 12 குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்ததாக அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாஷா கைது செய்யப்பட்டார். சமீபத்தில் பரோலில் வந்த பாஷா உடல் நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் டிசம்பர் 16 ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
பாஷாவின் உடல் டிசம்பர் 17-ஆம் தேதி திப்பு சுல்தான் ஜமாத் மஸ்ஜித்துக்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், பாஷாவின் இறுதி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்ததைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில், கோவை உக்கடம் பகுதியில் இன்று கருப்பு தின பேரணி நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால், போலீசார் தரப்பில் பேரணிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்தநிலையில், தடையை மீறி கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து அண்ணாமலை தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட பாஜகவினர் இன்று மாலை பேரணியாக செல்ல முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் பேரணி நடத்த முயன்றதால், அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் மற்றும் பாஜக, இந்து முன்னணி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கணபதி நகரில் உள்ள சி.எம். மண்டபத்தில் அடைத்தனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி வழக்கு… தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
“என்னை கொலை செய்ய சதி” : அதிகாலை 3 மணிக்கு போலீசுக்கு எதிராக சி.டி.ரவி போராட்டம்!