திமுக அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம், தடா பெரியசாமி வீடு தாக்குதல் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 19) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர் திமுக நிர்வாகியால் படுகொலை செய்யப்படுகிறார்.
சட்டமும் காவல்துறையும் தன்னை ஒன்றுமே செய்யாது என்று படுகொலை செய்த நபர் கொக்கரிக்கிறார்.
பாஜக பட்டியலின பிரிவின் தலைவர் தடா பெரியசாமி இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்று இருக்கிறது.
இதுபோன்ற அச்சுறுத்தல்கள் அவருக்கு இருப்பதை எடுத்துச் சொல்லி அவரின் பாதுகாப்பிற்குத் துப்பாக்கி ஏந்திய காவலரை நியமிக்க வேண்டிக் காவல் உயர் அதிகாரியிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
தாக்குதலும் இழப்பும் நேரிட்ட பிறகு பாதுகாப்பு வழங்கி என்ன பயன்.
மதுவினால் ஏற்படும் தீமைகளை அறிந்திருந்தும் அதிலிருந்து கிடைக்கும் தனிப்பட்ட கொள்ளை லாபத்திற்காக மக்களை மதுவிற்கு அடிமைகளாக இந்த திமுக அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் மது அருந்திவிட்டு வகுப்பிற்கு வந்ததாக மாவட்ட ஆட்சியரே மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இலவசங்களுக்கும் இரண்டு மூன்று ஆயிரம் ரூபாய்களுக்கும் மக்களின் ஓட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் மக்களுக்குக் கொடுப்பதற்காக மக்களையே கொள்ளை அடிக்கும் திமுக ஆட்சியைக் கண்டித்து மாபெரும் போராட்டம் வரும் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.
தமிழகம் இருண்ட காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
வரும் 21ஆம் தேதி அன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகிலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை திராவிட மாடல் இருளைப் போக்கும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற இருக்கிறது.
ராணுவ வீரரை நடுத்தெருவிலேயே அடித்துக் கொன்ற திமுகவைக் கண்டித்து அதே பிப்ரவரி 21ஆம் தேதி காலை 9:30 மணியளவில்,
ஆடம்ஸ் சாலை என்னும் சிவானந்தா சாலையில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்து கொள்ளும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
“நல்லா பண்றீங்க தம்பீ…”- பிடிஆரை பாராட்டிய அழகிரி
அன்புஜோதி ஆசிரம வழக்கு: விசாரணை அதிகாரிகள் நியமனம்!