அண்ணாமலை எங்களது சிங்கம், அவர் எப்போதும் உண்மையைத் தான் பேசுவார் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் ராணுவ அதிகாரியின் மனைவி தாக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திர பாபுவை இன்று (ஜூன் 12) குஷ்பு சந்தித்து விளக்கம் கேட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவண்ணாமலையில் ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டிஜிபியிடம் நேரில் விளக்கம் கேட்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி தெரிவித்துள்ளார். எந்த பெண் பாதிக்கப்பட்டாலும் நாங்கள் துணையாக இருப்போம். அதிலும் ஒரு ராணுவ வீரர் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றார்.
கலாஷேத்ராவில் பாதிக்கப்பட்ட பெண்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு, “நடவடிக்கை எடுக்கவில்லை என்று யார் சொன்னார்கள். எங்களுக்கென்று சில சட்டங்கள் இருக்கின்றது. அதன்படி தான் செயல்பட முடியும்” என்று தெரிவித்தார்.
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துப் போராடி வருகிறார்கள். அதில் உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு,
“மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் நேரடியாகத் தலையிட முடியாது. நாங்கள் போலீசோ, அமைச்சரோ கிடையாது நேரடியாக அவர்களிடம் சென்று பேசுவதற்கு. ஆனால் அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தேசிய மகளிர் ஆணையம் துணையாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் மல்யுத்த வீராங்கனைகள் நேரடியாக எங்களிடம் வரவில்லை. அவர்கள் போராட்டத்திற்குத் தான் சென்றார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டால் அந்த விவகாரம் நீதிமன்றத்திற்குத் தான் செல்லும். ஆனால் எந்த பெண் பாதிக்கப்பட்டாலும் நாங்கள் இருக்கின்றோம்” என்று கூறினார்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு,
“ஜெயக்குமார் பேசியது குறித்து என்னால் பதில் கொடுக்க முடியாது. ஏனென்றால் அவர் நேரடியாக அண்ணாமலையை பார்த்து கேள்வி கேட்டுள்ளார்.
எனவே அதற்கு அண்ணாமலை தான் பதில் சொல்ல முடியும். நான் பாஜகவில் இருக்கிறேன். எங்களைப் பொறுத்தவரை அண்ணாமலை எங்களுடைய சிங்கம் என்று தான் நான் சொல்வேன்.
இதை அதிமுக பாஜக மோதலாக பார்க்க முடியாது. ஏனென்றால் அதிமுகவுடனான எங்களது கூட்டணி தொடரும் என்று அமித்ஷாவே சொல்லியுள்ளார்” என்றார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அண்ணாமலை கூறியதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு,
“அவர் (அண்ணாமலை) என்றைக்கும் உண்மையைத்தான் பேசுவார். அரசியல் தெரிந்து தான் பேசுவார்.
அண்ணாமலை மாநில தலைவராக இருப்பதால் எந்த நேரத்தில் எப்படிப் பேச வேண்டுமென நன்றாகவே தெரியும். நாங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர் பேசியது சரியா இல்லையா என்று மேலிடத்தில் முடிவெடுக்கட்டும்.
ஜெயலலிதாவை பொறுத்தவரை ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்றார்கள். அவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டு எல்லோருக்கும் தெரியும். தொடர்ந்து இபிஎஸ் ஆட்சிக்கு வந்தார். இபிஎஸ் உடனான எங்களது நட்பில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது” என்றார்.
அமித்ஷா தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்று சொன்னதற்கு முதல்வர் ஸ்டாலின் அமித்ஷாவிற்கும் மோடிக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார் என்று கேள்விக்கு,
“முதல்வருக்கு முதலில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அவர் பேசுவதே புரியாத அளவிற்கு தான் இருக்கின்றது. சரியாக படிக்காமல், கேட்காமல் உடனே பேசுவது. பாதி கதையைத் தெரிந்து கொண்டு பேசுகிறார் முதலமைச்சர்” என்று தெரிவித்தார் குஷ்பு.
மோனிஷா