பொங்கல் வேட்டி சேலை கொள்முதலில் 88 கோடி ரூபாய் திமுக அரசு ஊழல் செய்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன்படி இன்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழ்நாட்டில் மணல் அள்ளுவது முதல் பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்குவது வரை ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளார்.
அதில், “திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆற்று மணல் அள்ள பத்து ஆண்டுகளாக இருந்த தடையை நீக்கியது. முன்பெல்லாம் ஆற்றின் கரையில் மணல் எடுப்பார்கள்.
திமுக ஆட்சியில், ஆற்றினுள் மணல் திருடுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும், கனிம வளங்களைப் பாதுகாக்க தனி அமைச்சகம் அமைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள்.
ஆனால், தமிழகம் முழுவதும் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதையே முழு வேலையாகச் செய்கிறார்கள். முதலமைச்சரின் மகனும் மருமகனும் சம்பாதிக்கவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பள்ளிச் சீருடைகள், பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் எல்லாம் தமிழக நெசவாளப் பெருமக்களிடம் கொள்முதல் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறிய திமுக,
தனியார் நிறுவனங்களிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு அவர்களிடம் கொள்முதல் செய்கிறார்கள். இலவச வேட்டி சேலை கொள்முதல் 600 கோடி ரூபாயில் 88 கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது.
தமிழக நெசவாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன், திமுகவின் ஊழல் கஜானாவிற்குப் போகிறது.
ஊழல் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்டு வரும் ஜவுளித் துறையின் அமைச்சர் பெயர் காந்தி. எந்த பெயரை யாருக்கு வைத்திருக்கிறார்கள்?
பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகத்தில் ஒவ்வொரு திட்டங்களிலும் பல லட்சம் மக்கள் பலன் பெற்றுள்ளனர்.
ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின், “பிரதமர் தமிழகத்துக்கு என்ன செய்தார் ?” என்று கேட்கிறார்.
பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் எட்டு மத்திய அமைச்சர்களை வைத்துக் கொண்டு திமுக என்ன செய்தது? ஊழல் செய்வதை மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருந்தது திமுக.
தமிழகத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பில்லாத அளவில் சட்டம் ஒழுங்கு உள்ளது. ஆளுநர் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது.
ஆனால், திமுக அரசு, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று காவல்துறையினரை வைத்துப் பேச வைக்கிறது. பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை, ஒட்டு மொத்த காவல்துறையும் உளவுத் துறையும் தோல்வியடைந்துள்ளது.
வரும் பாராளுமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக அரசுக்குப் பாடம் புகட்டுவோம். எளிய மக்களுக்காக ஆட்சி நடத்தும் நமது பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்க தேர்ந்தெடுத்து, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சந்திர கிரகணம்: கோயில்கள் நடை அடைப்பு விவரம்!
ஸ்டாலின் திமுகவுக்கு மட்டுமே முதல்வராக உள்ளார்: மத்திய பாஜக குழு!