டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை அஜெண்டா இதுதான்! சீனியர்களின் உள்ளே வெளியே ஆட்டம்! 

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் பாஜக பற்றிய பிரஸ்மீட் வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“மார்ச் 17ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சு மின்னம்பலத்தில் அம்பலப்படுத்தப்பட்டது.

’அதிமுகவோடு கூட்டணி அமைத்தால் எனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்’ என்று அண்ணாமலை அந்த கூட்டத்தில் பேசிய விஷயம் மின்னம்பலம் செய்தி மற்றும் வீடியோவுக்கு பிறகே விஸ்வரூபம் எடுத்தது.

மார்ச் 18 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்றுக் கொள்பவர்களுடன் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. கூட்டணி என்ற ரயிலுக்கு அதிமுக தான் இன்ஜின்’ என்று அண்ணாமலைக்கு கடுமையான பதில் கொடுத்தார்.

அதிமுகவில் இருந்து இப்படிப்பட்ட ரியாக்ஷன் என்றால் பாஜகவின் சட்டமன்ற தலைவரான நயினார் நாகேந்திரன் சொன்ன கருத்து இன்னும் ஹாட். ‘அண்ணாமலை சொல்வது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியாது. கடந்த தேர்தல்களில் திமுக- பாஜக, அதிமுக- பாஜக, திமுக- காங்கிரஸ் என கூட்டணிகள் தான் ஜெயித்துள்ளன’ என்று திருநெல்வேலியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார் நயினார்.

பொதுவாகவே ஒரு கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் சலசலப்புக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் பேசி விட்டால் அது பற்றி சமாளிப்பதற்காக… கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், ’அது அவரது தனிப்பட்ட கருத்து’ என்று மழுப்புவார்கள். ஆனால் இப்போது தமிழக பாஜகவின் தலைவர் பேசிய கருத்துக்கு அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவரான நயினார் நாகேந்திரன், ’மாநிலத் தலைவரின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து’ என்று கூறியுள்ளார். இது அண்ணாமலையை கோபப்படுத்தி இருக்கிறது.

மார்ச் 17ஆம் தேதி நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், ’அண்ணாமலை பேசிய சப்ஜெக்ட்டே தேவை இல்லை. மாநில மையக்குழு கூட்டத்தில் பேச வேண்டிய விஷயம் இது. கூட்டணி பற்றி முடிவு எடுக்க வேண்டியது தேசிய தலைமை தான்’ என்று வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

கூட்டத்துக்குள் வானதி சீனிவாசனும் கூட்டத்துக்கு வெளியே நயினார் நாகேந்திரனும் பேசிய கருத்துக்கள் அண்ணாமலையை கோபப்படுத்தி இருக்கின்றன.

அண்ணாமலைக்கும் சீனியர்களுக்கும் அப்படி என்ன பிரச்சனை என்று பாஜக வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும் அண்ணாமலையிடம் மாநில கட்சிகளின் தலைவர்களுக்குரிய பண்புகளே இருக்கின்றன. தன்னை தனிப்பட்ட முறையில் பிரமோட் செய்து கொள்ளும் திறமையும் ஆவலும் அவருக்கு இருக்கிறது. ஆனால் தேசிய கட்சியின் மாநில தலைமைப் பதவி என்பது வரம்புகளுக்கு உட்பட்டது.

ஆயினும் அண்ணாமலை தனது தனி ரூட்டில் செயல்பட எத்தனிக்கிறார். 2024 மக்களவைத் தேர்தலை பாஜக தலைமையில் தனியாக ஒரு கூட்டணி அமைத்து சந்தித்து, அதை அப்படியே 2026 சட்டமன்ற தேர்தலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அண்ணாமலையின் அஜெண்டா. இந்த அஜெண்டாவுக்குள் இன்னொரு மறைமுக அஜெண்டாவும் இருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து சிற்சில எம்பிக்களை தமிழக பாஜக பெற்றுவிட்டால்… அந்த சிலரில் ஓரிருவர் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருக்கிறது. தமிழக பாஜகவின் சீனியர்கள் மத்திய அமைச்சர்களாகும் ஆவலில் இருக்கிறார்கள். அதற்கு அதிமுக கூட்டணியோடு தான் 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். இதைத்தான் தேசிய தலைமையும் கணக்கு போடுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து ஒருசில எம்பிக்களையாவது பெற வேண்டும் என்பதுதான் பாஜக தேசிய தலைமையின் விருப்பம்.

ஆனால் அண்ணாமலையோ மக்களவைத் தேர்தலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருதுகிறார். அண்ணா மலையின் இந்த போக்கு தமிழகத்தில் பாஜகவினர் மத்திய அமைச்சர்களாக ஆகும் வாய்ப்பை தடுத்து நிறுத்துவதாக இருக்கிறது என்று சீனியர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் அவர் தேசிய தலைமை விடுத்த அறிவுரையையும் மீறி தனது தனிப்பட்ட எண்ணத்தை முன்னிறுத்தும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அது நடக்காத பட்சத்தில் ராஜினாமா செய்யப் போவதாகவும் நிர்வாகிகள் கூட்டத்தில் குண்டை தூக்கி போட்டுள்ளார்’ என்று சீனியர்கள் தெரிவிக்கிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலா 2024 மக்களவைத் தேர்தலா என்ற கேள்விக்கு மக்களவைத் தேர்தல்தான் முக்கியம் என்பது டெல்லி தலைமையின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் தான் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும்.

அதை உணர்ந்து கொண்டு தான் வானதி சீனிவாசனும், நயினார் நாகேந்திரனும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். அண்ணாமலை  டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.  அவரது டெல்லி பயணத்துக்கு பிறகு இதில் அடுத்த கட்ட அப்டேட்டுகள் தெரியவரும்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

கோவை பாட்டியின் காலில் விழுந்த பிரதமர் மோடி

’பத்து தல’ இசை வெளியீட்டு விழாவின் கிளிக்ஸ்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.