திமுகவின் கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பு வேலை செய்வது தான் பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை பணியா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஆகஸ்ட் 23) சென்னையிலிருந்து இரவு விமானம் மூலம் கோவைக்குச் சென்றார்.
அவருக்கு திமுக நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று (ஆகஸ்ட் 24) கோவையில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.
நாளை (ஆகஸ்ட் 25) திருப்பூருக்கு செல்லும் அவர், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவன ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார். 26ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், மக்களை அழைத்து வருவதற்கு பள்ளி வாகனங்களை வழங்குமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “கோவையிலும், ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளிகளிலும் வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்.
திமுக-வின் கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பு வேலை செய்வது தான் பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைப் பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
செல்வம்
பாஜக: இரவில் விலகிய சரவணனை காலையில் நீக்கிய அண்ணாமலை