அதிமுகவின் கூட்டணி முறிவு தீர்மானம் குறித்து தேசிய தலைமை சரியான நேரத்தில் பேசும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
பாஜக – அதிமுக இடையேயான வார்த்தை மோதல் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், இனி கூட்டணியில் இல்லை என்று அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“நன்றி மீண்டும் வராதீர்கள்” என்று ஹேஷ்டேக்கோடு இந்த அறிவிப்பை ட்விட்டரில் அதிமுக பதிவிட்டுள்ளது.
இன்று நடைபெற்ற அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில், “பாஜகவுடன் கூட்டணியில் இல்லை, இல்லை, இல்லை” என மூன்று முறை பொதுச்செயலாளர் அறிவித்ததாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறுகிறார்கள்.
அதிமுகவின் இந்த முடிவு குறித்து, கோவை கவுண்டம்பாளையத்தில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
#WATCH | Coimbatore | On AIADMK breaking alliance with BJP and NDA, Tamil Nadu BJP president K Annamalai says, "I will speak to you later, I don't speak during Yatra. I will speak later." pic.twitter.com/yObr5hSeT3
— ANI (@ANI) September 25, 2023
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ அப்புறம் பேசுகிறேன். யாத்திரையில் பாலிடிக்ஸ் பேசுவதில்லை. இது யாத்திரை” என்று கூறினார்.
மேலும் அவர், “என் மண் என் மக்கள் யாத்திரையில் இருக்கிறேன். அதிகமாக பேச நேரமில்லை. பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறேன்.
அதிமுகவின் அறிக்கையை படித்தோம். தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இதுகுறித்து தேசிய தலைமை பேசுவார்கள். சரியான நேரத்தில் பேசுவார்கள்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அண்ணாமலையுடன் இருந்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “விஷயம் அவ்வளவுதான்” என்று கூறி செய்தியாளர்கள் சந்திப்பை முடித்தார்.
பிரியா