வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பாஜக கூட்டணி முடிவு பற்றிய கேள்விகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோவும் வந்து விழுந்தது.
அவற்றைப் பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று செப்டம்பர் 18ஆம் தேதி பகல் பொழுதில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக அறிவித்தார்.
அவர் அவ்வாறு அறிவித்து 24 மணி நேரங்களுக்கு மேல் ஆகியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இருந்து எந்த ரியாக்ஷனும் வரவில்லை.
செப்டம்பர் 17ஆம் தேதி கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை சர்ச்சையின் அடுத்த தொடர்ச்சியாக சி.வி.சண்முகத்தையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையுமே கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அண்ணாமலையின் தொடர் எரிச்சல் ஊட்டும் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜகவை கூட்டணியில் இல்லை என்று அறிவித்து விட்டது அதிமுக.
இது தேசிய அளவில் பாஜகவுக்கு பெரிய அளவு இமேஜ் இழப்பையும் வாக்கு இழப்பையும் ஏற்படுத்தும் என்று கருதுகிறது பாஜக தேசிய தலைமை.
சில மாதங்களுக்கு முன்பு தான் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் டெல்லியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தனக்கு அருகில் வைத்து அழகு பார்த்தார் பிரதமர் மோடி.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இருக்கும் கட்சிகளை தக்க வைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே இக்கூட்டணியில் அங்கம் வகித்து பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் இணைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் பாஜகவின் மாநில தலைமைகளுக்கு தேசிய தலைமை அப்போது உத்தரவிட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியை மறு கட்டுமானம் செய்ய வேண்டும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோஷம் தேசிய தலைமையால் பாஜக மாநில தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதற்காக பல்வேறு மாநிலங்களிலும் தங்களது பழைய பார்ட்னர்களுடன் பாஜகவினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்நாட்டில் உல்டாவாக… தேசிய ஜனநாயக கூட்டணியின் மிக முக்கியமான கூட்டணி கட்சியான அதிமுக வெளியேறி இருப்பது இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி மீதான நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருப்பதாக டெல்லி தலைமை கருதுகிறது.
இதன் காரணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பட்டிருப்பதால் அவர் மீது மேலிட பொறுப்பாளர்கள் கோபம் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.
பி எல் சந்தோஷ் அண்ணாமலையை தொடர்பு கொண்டு ஏன் இவ்வாறு தேவையில்லாமல் பேசுகிறீர்கள்? சனாதனத்தை பற்றி பேசும்போது திமுகவை தாக்க பல்வேறு வழிகள் இருக்கும் நிலையில் அதிமுகவின் பெயரிலேயே இருக்கும் அண்ணா துரையை எதற்கு வீணாக குறிப்பிட்டு அக்கட்சியை வம்புக்கு இழுக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார்.
மேலும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அதிமுக பற்றியோ அதிமுக கூட்டணிப்பற்றியோ தமிழ்நாடு பாஜகவில் யாரும் பேச வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். அதனால் தான் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 33 சதவீத இட ஒதுக்கீடுக்காக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூட கூட்டணி பற்றிய கேள்விகளுக்கு தேசிய தலைமை முடிவு செய்யும் என்று சொல்லி கையெடுத்து கும்பிட்டு விட்டு நகர்ந்து விட்டார்.
அண்ணாமலையும் தன் மீது தேசிய தலைமை கோபத்தில் இருப்பதை அறிந்து 24 மணி நேரத்திற்கு மேலாக அமைதி காக்கிறார்.
அதிமுக கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே விரும்பாத அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தனி அணி அமைய வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். இது சொல்வதற்கும் கேட்பதற்கும் சுவையாக இருந்தாலும் தேர்தல் அரசியலில் 2024 எம்பி தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து குறைந்தபட்ச எண்ணிக்கையேனும் பாஜகவுக்கு கிடைக்க வேண்டும் என்பதால் அதிமுக கூட்டணியை விரும்புகிறது தேசிய தலைமை.
ஆனால் அண்ணாமலை தனது கருத்தில் பிடிவாதமாக இருப்பதால்… ஒருவேளை அதிமுக கூட்டணி வேண்டுமா அண்ணாமலை வேண்டுமா என்ற விவாதம் ஏற்படும் பட்சத்தில் அதிமுக கூட்டணியையே பாஜக தெரிவு செய்யும் என்கிறார்கள் இங்கிருக்கும் பாஜக சீனியர்கள்.
அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களோ… ‘கட்சியை வளர்ப்பதற்கு தான் அண்ணாமலை வழி சொல்கிறாரே தவிர கெடுப்பதற்கு அல்ல. இதற்கு மேல் தேசிய தலைமை முடிவெடுக்கட்டும் என்று அவர் அமைதியாக இருக்கிறார்’ என்கிறார்கள்.
இன்று மாலை தனது சமூகத்தள பக்கத்தில் வார்த்தைகளை விட செயலே வலிமையாக பேசும் என்ற பொருளில் தலைப்பிட்டு மோடி அரசின் சாதனைகளை அண்ணாமலை பட்டியலிட்டுள்ளார்.
நாளை செப்டம்பர் 20 ஆம் தேதி காங்கேயத்தில் அண்ணாமலையின் நடைப்பயணம் தொடர்கிறது. கொங்குநாடே ரெடியாக இரு என்று நடைப்பயணத்தின் இணை பொறுப்பாளரும் அண்ணாமலையின் வலது கரமுமான அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டுள்ளார்.
அதிமுகவின் சரமாரி தாக்குதல் பற்றி அண்ணாமலையின் மௌனம் உடையுமா என்பது காங்கேயம் நடைபயணம் தொடங்குவதற்குள் தெரியவரும்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
அண்ணாமலை வாயில கொழுக்கட்டையா? – அப்டேட் குமாரு
பாஜக கூட்டணி… எடப்பாடியுடன் கருத்து வேறுபாடா? வேலுமணி பதில்!