சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்ப்பட்டதைக் கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் இன்று (டிசம்பர் 26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது காதலருடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை இரண்டு நபர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதை வெளியே சொன்னால் வீடியோவை லீக் செய்துவிடுவேன் என்று மிரட்டி, மாணவியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
போலீசார் விசாரணையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது, சென்னை கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக, பாஜக கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக நுழைவுவாயிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் இன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் வலை நெரிக்கப்படுகிறது. எங்கள் மீது அடக்குமுறையை கையாளும் போலீஸ், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாலியல் வன்கொடுமை… அண்ணா பல்கலை முன்பு அதிமுக சாலை மறியல்!
மலையாளத்தின் உன்னத எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கமல்ஹாசன் உருக்கம்!