பாஜக அமைப்புத் தேர்தல் ஆய்வுக் கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 29) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜேபி நட்டா, பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர்கள், அனைத்து மாநில தலைவர்கள், மாநில அமைப்பு பொது செயலாளர்கள், அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் இணை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இது தற்போது பாஜக கட்சியின் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் கலந்துகொள்ளும் கடைசி கூட்டம் ஆகும்.
அதன்படி தமிழ்நாடு சார்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கேசவ விநாயகம், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இன்று கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் மண்டல, மாவட்டம் மற்றும் மாநில தலைவர்களுக்கான தேர்தலில் கவனம் செலுத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. 50 சதவீத மாநிலத் தேர்தல்கள் முடிந்த பின்னரே தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கும் என்றும், 50 சதவீத மாநிலங்களில் மண்டல, மாவட்டம் மற்றும் மாநிலப் பதவிகளுக்கான தேர்தலை ஜனவரி 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கிடையே டெல்லி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் புறப்பட்ட அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுவோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை, ஏற்கெனவே கூறியபடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக சட்ட ஒழுங்கு நிலவரம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பான பட்டியலை புகாராக அளித்துள்ளதாக பாஜக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அண்ணாமலை இதுவரை எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் போது விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
பொங்கல் தொகுப்பில் ஏன் பணப்பரிசு இல்லை? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!