அண்ணா பல்கலை மாணவி வழக்கு : சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை

Published On:

| By Kavi

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கடந்த 23ஆம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஞானசேகரன் என்ற பிரியாணி வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்குத் தொடர்பாக நேற்று (டிசம்பர் 26) செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் அருண், “24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு 100க்கு அழைப்பு வந்தது. அதில் அண்ணா பல்கலை மாணவி பேசினார். இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அண்ணா பல்கலை கழகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றத்தை தடுக்க ஒரு கமிட்டி (POSH) இருக்கிறது. இந்த கமிட்டியில் இருந்த பேராசிரியர்களும், பாதிக்கப்பட்ட மாணவியும் புகார் அளித்தனர். அதன்படி இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என்று கூறினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனிடம், அந்த மாணவி பல்கலைக் கழக POSH குழுவில் புகார் அளிக்காமலேயே , 100க்கு போன் செய்து புகார் அளித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்… ஆனால் ஆணையர் POSH கமிட்டியும் சேர்ந்து புகார் கொடுத்தது என சொல்கிறார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அமைச்சர் கோவி . செழியன் “அப்படி ஒன்றும் தகவல் இல்லை. அப்படி இருந்தால் காவல்துறை விசாரணைக்கு உட்பட்டது. நிச்சயமாக அவர் POSH கமிட்டியிடம் சொல்லவில்லை.” என்று கூறியிருந்தார்.

இவர்கள் இருவரும் பேசியதை சுட்டிக்காட்டியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “ உயர் கல்வித்துறை அமைச்சர், இன்று ஊடகங்களில் பேசுகையில், முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். ஆனால், நேற்று ஊடகங்களைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல்துறைக்குப் புகார் வந்தது என்று கூறுகிறார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது?

அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்வரை இதனை விடப் போவதில்லை. பிரச்சினையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இருக்குமேயானால், திமுக அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

பேபி ஜான்: விமர்சனம்!

வேலியே வேலியை மேய முயற்சி : பெண் காவலருக்கு போலீஸ் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ செய்த காரியம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share