அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை… எடப்பாடி கண்டனம்!

Published On:

| By Minnambalam Login1

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை சுட்டிக்காட்டி தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார்

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவரும் அவரது நண்பரும் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இரவு, பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், மாணவியின் நண்பனை தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும், இந்த விவகாரத்தை தீவிரமான விஷயமாக எடுத்துக்கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உறுதியளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை தொடர்ந்து நான் சுட்டிக்காட்டிய போதெல்லாம் அதனை எப்படி மறுப்பது என்பதில் மட்டுமே முனைப்பாக இருந்த ஸ்டாலின், எனது குற்றச்சாட்டின் தீவிரம் உணர்ந்து கொஞ்சமாவது செயல்பட்டிருந்தால், இதுபோன்ற பல சம்பவங்களை தடுத்திருக்கலாம்.

பெண்கள் படிப்பு மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது.

மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

-அப்துல் ரஹ்மான்

கோவை, மதுரையில் எப்போது மெட்ரோ ரயில் சேவை?

கேரளா ராஜேந்திர விஸ்வநாத், மணிப்பூர் அஜய் குமார் பல்லா… 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel