போலீசாரை டென்ஷனாக்கிய அதிமுகவின் ‘யார் அந்த சார்?’ போஸ்டர்!

Published On:

| By Selvam

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

ஆளும் திமுக அரசுக்கு எதிராக அதிமுக, பாஜக கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக்கொண்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தநிலையில், நேற்று (டிசம்பர் 29) மாலை யாரும் எதிர்பார்க்காத வேளையில் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் யார் அந்த சார்? என்ற பதாகையை கையில் ஏந்தி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஐடி விங் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, பெண்களுக்கு பாதுகாப்பில்லை, யார் அந்த சார்? என்று போஸ்டர் ஒட்டி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவின் இந்த நூதன போராட்டத்தை ஆதரித்திருந்தார்.

மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த அதிமுக ஆர்ப்பாட்டம் இன்று சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுக நடத்திய யார் அந்த சார் போராட்டம் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் யார் அந்த சார் போஸ்டர் ஓட்டுபவர்களை கைது செய்யவும், போஸ்டர்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுகவின் இன்றைய போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் போராட்டம் நடைபெறும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை தொடங்கியதும் உடனடியாக கைது செய்ய மேலிடத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள்.

வணங்காமுடி

19,000 ஊழியர்களுக்கு BSNL விருப்ப ஓய்வு? – காரணம் இதுதான்!

மகேஷ் குமார், வருண் குமாருக்கு பதவி உயர்வு… ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share