ஆர்ப்பாட்டம் வெற்றி: ஸ்டாலினுக்கு நன்றி சொல்லும் அதிமுகவினர்… ஏன்?

Published On:

| By Aara

அண்ணா பல்கலைக்கழகத்தில்  மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில்,  தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக  டிசம்பர் 30ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு எதிரே உட்பட  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  அதிமுக நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில்  மூலமாக கட்சியினரிடையே ஒரு புதிய எழுச்சி உருவாகி இருப்பதாக கூறுகிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகவோ அல்லது பாஜகவா என்ற  கேள்வி ஊடகங்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வந்தது.   பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகங்களில் திமுக பற்றிய அதிரடியாக பேசுவதும்  சில நாட்களுக்கு முன்பு அவரது சாட்டையடி  போராட்டமும்  பேசுபொருள் ஆயின.

இந்த நிலையில் தான்  டிசம்பர் 30ஆம் தேதி  அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என  அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் களமிறங்கினார்கள்.  ஒவ்வொரு  மாவட்டத்திலும்  நூற்றுக்கணக்க்கில் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும்  காலை முதலே ஆர்ப்பாட்டத்துக்காக  கூடினார்கள்.

அதே நேரம் காவல்துறை பல இடங்களில் அதிமுகவினரை  ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்ய விடாமல் அனுமதி மறுத்து உடனுக்குடன் அவர்களை அரசு பேருந்துகள் மூலம் கைது செய்து அப்புறப்படுத்தியது.   கைது செய்யப்பட்டவர்கள் ஆங்காங்கே இருக்கும் திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.  

நேற்று மாலை  வரை  தாங்கள் ரிமாண்ட் செய்யப்படுவோமா அல்லது விடுவிக்கப்படுவோமா என்ற கேள்வியுடன் மண்டபங்களில் இருந்த அதிமுகவினர் இரவு 7.30  மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழக காவல்துறையின் வட்டாரங்களை விசாரித்த போது,  “மாநிலம் முழுவதும் 67 இடங்களில் அதிமுகவினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்  பத்தாயிரம் பெண்கள் உட்பட 40,000 பேர் கலந்து கொண்டார்கள். இவர்களில் 6 ஆயிரம் பெண்கள் உட்பட 24 ஆயிரம் பேர்  கைதானார்கள்” என்று  புள்ளி விவரங்களை தெரிவிக்கிறார்கள்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கைதான கோவை புறநகர் தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் டி. லட்சுமி காந்தனிடம் பேசியபோது,

“கோவையில் இரு இடங்களில் ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வரும்போதே போலீஸாரும் குவிக்கப்பட்டனர், மக்களும் எங்கள் போராட்டங்களில் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.

எங்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். அந்த மண்டபத்துக்கு முன்னாள் அமைச்சர் அண்ணன் வேலுமணி நிர்வாகிகளையும் , தொண்டர்களையும் சந்திக்க வந்தார். அவர் மண்டபத்துக்குள் நுழைந்தவுடனே இதுவரை இல்லாத அளவுக்கு கட்சி நிர்வாகிகளிடம் உணர்வலை எழுந்தது. எங்களிடம் உரையாற்றிய வேலுமணி, ‘தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்புக்காக தொடர்ந்து போராடுவோம். அடுத்த ஆட்சி நம்முடைய ஆட்சிதான்’ என்று பேசினார். இது அதிமுகவினரை தேர்தலுக்கு தயார் படுத்திவிட்டது” என்கிறார்.

மயிலாடுதுறையில் போராட்டம் நடத்தி கைதாகி விடுதலையான அதிமுகவின் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர்  கோமல் அன்பரசனிடம் பேசினோம்.

“அதிமுக பொதுச் செயலாளர்  உத்தரவின் பெயரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டதத்துக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது  போலீசாரே  40 ஆயிரம் பேர் என்று கணக்கு சொன்னால் அதைவிட  இன்னும் பல மடங்குகள் அதிகமாகவே  இருக்கும் என்பதை அரசியல் அறிந்த அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சகோதரிக்கு நீதி கேட்டு தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நாங்கள் அறிவித்தோம். ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என்று சொல்லும்  திமுக அரசு… பிரதான எதிர்க்கட்சி ஜனநாயக வழியில் போராடுவதற்கு கூட உரிய அனுமதியை அளிக்க மறுத்தது.  மேலும் எங்கள் மீது அடக்குமுறைகளை கையாண்டது.

ஒருவேளை அதிமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலம் முழுவதும் போலீசார் அனுமதி கொடுத்திருந்தால்  ஒரு மணி- நேரம் இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றிருப்போம்.   ஆனால் இந்த போராட்டத்தில் ஈடுபட வைத்து  கைது செய்து  மண்டபங்களில் அடைத்து அதிமுகவுக்கு ஒரு புதிய ஆற்றலை அளித்திருக்கிறார்  முதலமைச்சர் ஸ்டாலின்.  உண்மையில் அவருக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி  மறுக்கப்பட்டு உடனுக்குடன் நாங்கள் கைது செய்யப்பட்டு, அரசு பஸ்களில் ஏற்றப்பட்டோம்.  அதிமுக கொடிகளுடன் நாங்கள் முழக்கமிட்டு கொண்டே கைதாவதை பார்த்த பொதுமக்கள்  எங்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நேற்று பகல் முழுவதும்  எங்களுடைய மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும்  ஒன்றிய செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், கிளை செயலாளர்கள் வரை  அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து கிட்டத்தட்ட மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டங்களையும்  நடத்தியிருக்கிறார்கள். இதில் அடுத்த கட்ட வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

திமுக அரசுக்கு எதிரான மொமன்ட்டம் டிசம்பர் 30  ஆம் தேதி  துவங்கி விட்டது. அதிமுக இதை கையில் எடுத்து தொடர்ந்து போராடி 2026 தேர்தலில் வெற்றி பெறும்” என்றார் கோமல் அன்பரசன்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பொன்வண்ணன் திரை வாழ்வில் பருத்திவீரன் தந்த வெளிச்சம்!

வேலைவாய்ப்பு : மீன் வள பல்கலையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share