திமுக தலைமைக் கழக தேர்தலை நடத்தும் ஆற்காடு வீராசாமி: யார் இந்த சூப்பர் சீனியர்?

அரசியல்

திமுக தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட்டம் இன்று (அக்டோபர் 9) சென்னையில் நடைபெறுகிறது.

திமுகவின் உட்கட்சி அமைப்பு தேர்தல் சட்டப்படி அக்டோபர் ஏழாம் தேதி தலைவர் பதவிக்காக ஸ்டாலினும் பொதுச் செயலாளர் பதவிக்காக துரைமுருகனும் பொருளாளர் பதவிக்காக டி.ஆர் பாலுவும் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் இவர்களின் வெற்றி முடிவு செய்யப்பட்டது என்றாலும் கூட… சட்ட திட்ட விதிகளின்படி அந்த வேட்பு மனுக்களை ஆராய்ந்து அதன் முடிவுகளை முறைப்படி அறிவிப்பதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருவரை தலைமையே நியமிக்கும்.

கலைஞர் காலத்தில் இப்படி தலைமை கழக தேர்தலை நடத்திய பெருமையைப் பெற்றவர் மறைந்த முன்னாள் எம்பி ஆன மதுரை அக்னி ராஜ். கட்சியின் மிக மூத்தவர்களில் முதன்மையானவரையே இந்த பொறுப்பை ஏற்குமாறு தலைமை பணிக்கும். 

இந்த வகையில் திமுகவின் 15ஆவது உட்கட்சி தேர்தலில் தலைமை கழக தேர்தலை நடத்த இருக்கும் அந்த மூத்த முன்னோடி ஆற்காடு வீராசாமி ஆவார்.

50 கிட்ஸ் முதல் 2000 கிட்ஸ் வரை பல தலைமுறைகளை பார்த்த பழுத்த அரசியல்வாதியான ஆற்காடு வீராசாமி தான் திமுகவின் 15ஆவது உட்கட்சி தலைமை கழக தேர்தலை நடத்துகிறார். கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது சகாக்களுடன் ஆற்காடு வீராசாமி இல்லத்திற்கு சென்றார்.

வழக்கம்போல அவரது உடல் நலம் விசாரிக்க தான் செல்கிறார் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கையில்… ‘தலைமை கழக தேர்தல் அலுவலராய் இருந்து நீங்க தான் இதை நடத்தி தரணும்’ என்று ஆற்காடு வீராசாமி இடம் வேண்டுகோள் வைத்தார் ஸ்டாலின். தனது வயது மூப்பு காரணமாக முழு ஓய்வில் இருந்த போதும் ஸ்டாலின் சொன்னதும் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஆற்காடு வீராசாமி.

பதினைந்தாவது உட்கட்சித் தேர்தலை நிறைவு செய்து கொடுக்க இருக்கும் ஆற்காடு வீராசாமி திமுகவின் பல உட்கட்சித் தேர்தல்களையும், பொதுத் தேர்தல்களையும் கண்டவர்.

இந்தியாவிலேயே முதலிடம்

ஆற்காடு அருகில் உள்ள குப்பிடிச்சத்திரம் என்ற ஊரில் நாராயணசாமி நாயுடுவுக்கு மகனாகப் பிறந்தவர் தான் வீராசாமி. பள்ளிப்படிப்பு படிக்கும்போதே திமுக பொதுக்கூட்டங்களுக்கு சென்று பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோரின் பேச்சுகளை ரசிக்கக் கூடியவர்.

1950 களில் தட்டச்சு தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற வீராசாமி உடனடியாக அரசு பணிக்கு சென்றார். மின்சார வாரியத்தின் தலைமை பொறியாளருக்கு தட்டச்சு உதவியாளராக அரசு பணி கிடைத்தது வீராசாமிக்கு. அவரது அலுவலகம் சென்னையில் அப்போது பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கு அருகே அமைந்தது காலம் நடத்திய விளையாட்டுதான்.

அன்பழகனுடன் நெருக்கம்

வாக்காளர் பட்டியலை தட்டச்சு செய்து கட்சியினருக்கு நிர்வாகிகளுக்கு கொடுப்பதற்காக ஆள் தேடிக் கொண்டிருந்த போதுதான் வீராசாமியை பற்றிய தகவல் அன்பழகனுக்கு தெரிந்தது.

வேகமாகவும் சரியாகவும் தட்டச்சு செய்யக்கூடிய ஒருவர் பக்கத்திலே மின்சார வாரியத்தில் வேலை பார்க்கிறார் என கேள்விப்பட்டு பேராசிரியர் அன்பழகன் அப்போது வீராசாமியை தன் வீட்டுக்கு அழைத்தார்.

ஏற்கனவே அன்பழகன் பேச்சுகளை மேடைகளில் ரசித்து ருசித்த வீராசாமிக்கு அன்பழகன் வீட்டுக்கே சென்று தட்டச்சு செய்கிறோம் என்பது பெரும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. இதுவே அவரது அரசியல் வாழ்வுக்கான அட்சரமாகவும் ஆகிப்போனது.

ஒரு பக்கம் அரசுப் பணி… மறுபக்கம் கட்சிப் பணி

மிகவும் துடிப்பான இளைஞராக இருந்த வீராசாமி ஒரு பக்கம் அரசு பணி செய்து கொண்டே இன்னொரு பக்கம் திமுக கட்சி பணி செய்ய ஆரம்பித்தார். வீராசாமியின் வீரியத்தை கண்டு வியந்து அன்பழகன் அவரை அண்ணாவிடம் அறிமுகப்படுத்தினார்.  பகுதி செயலாளராக நியமிக்கப்பட்டார் வீராசாமி.

1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸ் ஆட்சியை தட்டிப் பறித்த அந்த தேர்தலில் வீராசாமி ஆற்காடு பகுதியில் அண்ணாவால் நிறுத்தப்பட்டார். சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி கொண்டார் வீராசாமி. அதுவரை வெறும் வீராசாமி ஆக இருந்தவர் அதன் பின் ஆற்காடு வீராசாமி ஆனார்.

அண்ணா மறைவுக்குப் பிறகு 1971 ஆம் ஆண்டு மீண்டும் ஆற்காடு தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானார். தினம் தினம் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து விட்டு வரும் முக்கியமானவர்களில் வீராசாமியும் ஒருவராக இருந்தார்.

வீராசாமியின் வீரியம்

வீராசாமியை எங்கே எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதில் கலைஞர் தெளிவாக இருந்தார். 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டபோது சட்டமன்றத்தில் திமுக ஆட்சிக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. காரணம் அப்போது சபாநாயகராக இருந்த மதியழகன் எம்ஜிஆரின் ஆதரவாளராக மாறிவிட்டார்.

எம்ஜிஆரின் ஆதரவாளரை சபாநாயகராக வைத்துக் கொண்டு கலைஞர் ஆட்சியை நடத்த முடியாது. அப்படி என்றால் மதியழகனை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இந்த செயல்முறைக்கு சட்டமன்றத்தில் அதிரடியான செயல்பாடுகள் தேவைப்பட்டன.

அப்போதுதான் தாங்கள் கொண்டு வந்த சபாநாயகர் மதியழகனுக்கு எதிராக திமுகவே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் கொண்டு வரும் பொறுப்பை ஆற்காடு வீராசாமி இடம் ஒப்படைத்தார் கருணாநிதி.

மிகப் பதட்டமான சூழ்நிலையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து, அதை வெற்றி பெற வைத்து சபாநாயகர் மதியழகனை பதவியில் இருந்து நீக்கி… தங்களுக்கு தோதான விருதுநகர் சீனிவாசனை புதிய சபாநாயகராக தேர்ந்தெடுப்பது வரை ஆற்காடு வீராசாமி சட்ட மன்றத்தில் தீயாக வேலை செய்தார்.

அவசர நிலை காலத்தில் ஆற்காடு

இந்த சம்பவத்துக்கு பிறகு கலைஞரோடு மிகவும் நெருக்கமாகிவிட்டார் வீராசாமி. எந்த அளவுக்கு நெருக்கமென்றால் 1975 ஆம் ஆண்டு அவசர நிலை பிரகடனத்தின் போது முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமானவர்கள் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

அந்த பட்டியலில் ஆற்காடு வீராசாமியும் இடம் பெற்றார். ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு, ஸ்டாலின் ஆகியோர் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் நடந்த சித்திரவதையில் ஆற்காடு வீராசாமியின் ஒரு காது, கேட்கும் திறனை இழந்தது. இந்தத் தகவலை கேட்ட கருணாநிதி துடித்துப் போனார்.

ஆற்காடு வீராசாமியின் காது பழுதானது ஒரு வகையில் கருணாநிதியுடன் அவரது நெருக்கத்தை அதிகப்படுத்தியது. சில அடிகள் தள்ளி நின்று எப்போதும் பேசும் கருணாநிதி… இந்த சம்பவத்துக்கு பிறகு ஆற்காடு வீராசாமியை தன் அருகில் அழைத்து காதோடு காதாக பேச ஆரம்பித்தார்.

அரக்கோணம் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, பின்பு ஆற்காடு சட்டமன்றத்தில் தோல்வி, என்று அரசியல் வாழ்வில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் கருணாநிதி உடனான நெருக்கம் குறையவே இல்லை. .

அருகே வைத்து அமைச்சர், பொருளாளர் ஆக்கிய கலைஞர்

மீண்டும் 1989 சட்டமன்றத் தேர்தலில் ஆற்காடு வீராசாமி தன் பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக  சென்னையின் புரசைவாக்கம் தொகுதியில் அவரை நிறுத்தினார் கருணாநிதி. அந்தத் தேர்தலில் ஜெயித்து கருணாநிதியின் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சரானார் ஆற்காடு. அதன்பின் மின்சாரத்துறை அவருக்கு அளிக்கப்பட்டது.

அந்த ஆட்சி கலைக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலையால் அரசியல் சூழல் மாறி தோல்வியை சந்தித்தார் ஆற்காடு.

இந்த காலகட்டத்தில் திமுகவின் பொருளாளராக இருந்த சாதிக் பாட்ஷா காலமான நிலையில்… தலைமைக் கழகத்தின் மூன்றாவது முக்கிய பொறுப்பான பொருளாளர் பதவிக்கு ஆற்காடு வீராசாமியை அமர வைத்தார் கருணாநிதி.

தலைவர்-தொண்டர்களின் பாலம்

கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோரின் கருத்துக்களை, எண்ணங்களை விருப்பங்களை அது எதுவாக இருந்தபோதும் தலைவர் கருணாநிதியிடம் கொண்டு சேர்ப்பதில் சமர்த்தராக இருந்தார் வீராசாமி. அதனால் ஆற்காட்டார் காதில் விஷயத்தை போட்டால் அது கலைஞர் காதுக்கு சென்று விடும் என்பது திமுகவின் எழுதப்படாத சட்டம் ஆகிவிட்டது.

தன்னைத் தேடி தொண்டர்கள் யார் வந்தாலும் அவர்கள் என்ன சிபாரிசு கடிதம் கேட்டாலும் அதை மறுக்காமல் எழுதி கையெழுத்திட்டு தருவார். தொண்டர்களிடம் எந்த அளவுக்கு அவர் ஈடுபாடாக இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காக… ஒரு பத்திரிக்கையாளர் தொண்டரைப் போல அவரிடம் சென்றார். 

‘ நான் இந்தியாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். அதற்காக எனக்கு சிபாரிசு செய்ய இந்த கடிதத்தில் கையெழுத்திட வேண்டுகிறேன்’ என்று அந்த பத்திரிகையாளர் எழுதியிருந்தார். அந்த கடிதத்திலும் கையெழுத்து போட்டுக் கொடுத்தவர் ஆற்காடு வீராசாமி.

1996 தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆனார். 2006 ஆம் ஆண்டு மின்சார துறை அமைச்சர் ஆனார்.

தலைமைக் கழகத்தின் பொருளாளராக அவர் இருந்த போது கலைஞர் உண்டாக்க நினைப்பதையும் உடைக்க நினைப்பதையும் புரிந்து கொண்டு பொதுவெளியில் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் வீரியமாக வினையாற்றினார்.

ஆற் ‘கட்’டார் விமர்சனம்!

2006 ஆம் ஆண்டு ஆட்சியின் நடுப்பகுதியில் ஏற்பட்ட மின்சார பற்றாக்குறையால் ஆற்காட்டாரை ஆற்கட்டார் என்று பத்திரிகைகள் விமர்சிக்க  தொடங்கின. 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடைவதற்கு மின்வெட்டு முக்கியமான காரணமாக அமைந்தது. தேர்தலுக்கு முன்பே இதை சரியாக கணித்து தோல்வி என்றால் அது என்னால் தான் வரும் என்று வெளிப்படையாக பேசியவர் ஆற்காட்டார்.

2011 தேர்தல் தோல்விக்கு பிறகு ஆற்காடு வீராசாமியின் உடல் நலத்திலும் சில பிரச்சினைகள் ஏற்பட அவரால் முன்பு போல சுறுசுறுப்பாக இயங்க முடியவில்லை. அவரிடமிருந்து பொருளாளர் பதவியை எடுத்து ஸ்டாலினிடம் கொடுத்தார் கலைஞர்.

தலைமை கழக முதன்மை செயலாளர் என்ற பதவியை ஆற்காட்டாருக்காகவே உருவாக்கினார். 

வீராசாமி தீர்த்த பஞ்சாயத்துகள்

கட்சி பஞ்சாயத்துகள்… கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் இடையிலான ஊடல்கள், கூட்டணி பஞ்சாயத்துகள் என்று ஆற்காட்டர் தீர்த்து வைக்காத பிரச்சினையே கிடையாது.

தனக்காக பொருளாளர் பதவியை விட்டுக் கொடுத்தார் என்ற மரியாதை ஆற்காடு வீராசாமியின் மீது ஸ்டாலினுக்கு மிக அதிகமாகவே உண்டு.

அந்த அன்புக்காகவே கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆற்காடு வீராசாமியின் புதல்வர் டாக்டர் கலாநிதி வீராசாமியை மக்களவைக்கு அனுப்பினார் ஸ்டாலின்.

தான் முறைப்படி உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு தலைவராக வரும் தருணத்தில்… அதற்கு தேர்தல் அலுவலராக ஆற்காடு வீராசாமியை விட்டால் வேறு யாரும் இல்லை என்பதை உணர்ந்து அவரது வீடு தேடி போய் வேண்டுகோள் வைத்தார் ஸ்டாலின்.

1967 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முதல் கலைஞர் நெருப்பு கங்காக தகித்த காலங்களைக் கடந்து 91 வயதில்… பழுத்த பழமாக வந்து தலைமை கழக தேர்தலை நடத்துகிறார் ஆற்காடு வீராசாமி.

வேந்தன்

ஆ.ராசா பேச்சு எதிரொலி! வர்ணம், சாதி தேவையில்லை- ஆர்.எஸ்.எஸ். தலைவர்  மோகன் பகவத் 

தடை மேல் தடை: கனிமொழி துணைப் பொதுச் செயலாளர் ஆனது எப்படி தெரியுமா? 

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *