மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் அடியோடு ஒழித்து நிரந்த முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (நவம்பர் 13) வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா நகர் 2-ஆவது அவென்யூ சாலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதைக்குள் நுழைந்து விபத்தை ஏற்படுத்தியது.
இதில் நடைபாதையில் நின்றிருந்த துப்புரவு பணியாளர், சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் உள்பட 6 பேர் தூக்கி வீசப்பட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விபத்து நடந்த இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காரில் வந்த மூன்று பேரில் இருவர் தப்பி சென்றனர். காரை ஓட்டி வந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆசிப்பை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அவர் கஞ்சா போதையில் இருந்துள்ளார். கஞ்சா போதையில் வாகனத்தை இயக்கியதே விபத்துக்கான காரணம் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தப்பி ஓடிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கார் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை அண்ணாநகரில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
அதே விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையின் காரணமாகவே அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தலைநகர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதன் விளைவே இது போன்ற விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவர் மத்தியிலும் தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரத்தை அடியோடு ஒழித்து நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதோடு, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…