கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய மதுபான கொள்கை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சந்தித்து வருகிறது.
இந்தக் கொள்கையின் மூலம் கட்சிக்கு நெருக்கமானவர்கள் ஆதாயம் அடைந்ததாகவும், ஊழல் நடந்ததாகவும் கூறி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மற்றும் அமைப்புகள் மீது சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக தீவிரமாக பொது விவகாரங்களில் ஈடுபடாமல் இருந்த அன்னா ஹசாரே,
தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து கடிதம் ஒன்றை இன்று (ஆகஸ்ட் 30) எழுதியுள்ளார்.
அன்னா ஹசாரேவின் கடிதம்!
அதில்,”நீங்கள் முதல்வராக பதவியேற்ற பிறகு இப்போது தான் முதல்முறையாக உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.
ஏனென்றால் உங்கள் அரசாங்கத்தின் மதுபானக் கொள்கை குறித்த சமீபத்திய செய்திகளால் நான் வேதனை அடைந்துள்ளேன்.
நீங்கள் எழுதிய ‘ஸ்வராஜ்’ புத்தகத்தில் மதுபானக் கொள்கைகள் பற்றி புரட்சிகர விஷயங்களை எழுதியிருந்தீர்கள், அதற்கு என்னை அறிமுக உரையும் எழுத வைத்தீர்கள்.
அதில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகே மதுபான கடைகள் அமைக்ககூடாது என்று கூறி இருந்தீர்கள்.
ஆனால் நீங்கள் முதல்வரான பிறகு அவற்றையெல்லாம் மறந்துவிட்டீர்கள்.
மதுவைப் போல அதிகாரமும் போதை தரும். நீங்கள் இப்போது அதிகார போதையில் மூழ்கிவிட்டீர்கள்.
மாநிலத்தின் புதிய மதுக் கொள்கை மூலம் மாநிலத்தில் மது விற்பனையும், குடிப்பழக்கமும் அதிகரிக்கும்.
சாலையோர மதுக்கடைகள் அதிகரிப்பதன் மூலம் ஊழல் ஆறாக பெருக்கெடுத்து ஓடும். இது பொதுமக்களின் நலனுக்கு எதிரானது.
நீங்கள், மணீஷ் சிசோடியா மற்றும் பிறருடன் சேர்ந்து உருவாக்கிய ’ஆம் ஆத்மி கட்சி’ இப்போது வேறு எந்தக் கட்சிகளின் செயல்பாடுகளில் இருந்தும் வித்தியாசமாக இல்லை.
வலுவான லோக்பால் மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, மக்கள் விரோத குறிப்பாக பெண்களுக்கு எதிரான இந்த மதுபான கொள்கையைக் கொண்டு வந்துள்ளீர்கள்.
அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும் நீங்கள் ஊழல் வட்டத்தில் சிக்கியிருப்பது போல் தெரிகிறது.
ஒரு பெரிய இயக்கத்தில் இருந்து தோன்றிய கட்சிக்கு இது போன்ற செயல் நல்லதல்ல” என்று அன்னா ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த அன்னா ஹசாரே?
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் முகமாக நாடு முழுவதும் அறியப்பட்டார் அன்னா ஹசாரே.
அவருக்கு அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி, மேதா பட்கர் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் ஆம் ஆத்மி கட்சி உருவான போதும் அதில் இருந்து விலகி இருந்த அன்னா ஹசாரே தேர்தல் அரசியலில் இருந்தும் விலகி இருந்தார்.
டெல்லியில் கடந்த 2013ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தாலும். இதுவரை அன்னா ஹசாரே எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது மதுபான மசோதா முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், அன்னா ஹசாரேவின் இந்த கடிதம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடியிடம் இருந்து க்ளீன் சிட்!
முன்னதாக இன்று காலை காசியபாத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து சிசோடியா கூறுகையில், முன்னதாக எனது வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.
அதே போன்று இன்று எனது வங்கி லாக்கரில் நடைபெற்ற சோதனையிலும் எதுவும் கிடைக்கவில்லை.
சிபிஐ அதிகாரிகள் எங்களை நன்றாக நடத்தினார்கள். நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைத்தோம்.
பிரதமர் மோடியிடம் இருந்து இதன் மூலம் எனக்கு க்ளீன் சிட் கிடைத்துள்ளது.” என்றார்.
-கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகம் வரும் கெஜ்ரிவால்: டெல்லி சென்று அழைத்த அன்பில் மகேஷ், ஏன்?
Comments are closed.