சனாதனமும், பாரதமும்: ஆரிய மாயையின் வரலாற்று வடிவங்கள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

அண்ணா தன் நூலுக்கு ஆரிய மாயை என்று பெயர் சூட்டக் காரணம் ஆரியம் பிறரை மயக்கி தன்னை ஏற்கச் செய்யும் தன்மை கொண்ட து என்பதைக் குறிக்கத்தான். ஆரியம் என்று ஒன்றுமில்லை; அப்படி இருப்பது போல மாயத்தோற்றம் மட்டும்தான் இருக்கிறது என்ற பொருளில் அவர் அந்த பெயரைச் சூட்டவில்லை. ஆரியம் என்று ஒன்று இருக்கிறது. அது பிறருக்கு நன்மை தருவது போல தோற்றமளித்து அவர்களையும் தன் கருத்தியலை ஏற்கச் செய்கிறது என்பதைக் குறிக்கவே அவர் ஆரிய மாயை என்று பெயர் வைத்தார். நாம் அந்த மாயைக்கு ஆட்படாமல், ஆரியத்தின் உண்மையான தன்மையை அறிய வேண்டும்.

நானும், நண்பர்கள் ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், வி.எம்.எஸ். சுபகுணராஜன் ஆகிய மூவரும் சேர்ந்து எழுதியுள்ள “Rule of the Commoner: DMK and the Formations of the Political in Tamil Nadu, 1949-1967” என்ற ஆய்வு நூலில் ஆரிய மாயை என்பதை Aryan Allure என்றுதான் மொழியாக்கம் செய்துள்ளோம். இதற்கு முன்பு செய்தவர்கள் Aryan Illusion என்று மொழியாக்கம் செய்தார்கள். அது தவறான பொருளாகும். ஆங்கிலத்தில் Allure என்றால் கவர்ந்திழுப்பது.

இன்று வரை ஆரியம் அதே வேலையைத்தான் செய்கிறது. இரண்டு வார்த்தைகளை வைத்துக்கொண்டு பெரும் மாய்மாலங்களை செய்கிறார்கள். ஒன்று சனாதனம். மற்றொன்று பாரதம். இரண்டுமே ஆரியர்கள் உருவாக்கிய சமஸ்கிருத மொழிச் சொற்கள். மற்ற மொழிகளிலும், தமிழிலும் புழங்குகின்றன என்றாலும். இந்த இரண்டு சொற்களை எவ்வாறு புரிந்துகொள்வது, அவை குறித்த சர்ச்சை என்ன, ஆரிய மாயை எப்படி செயல்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

சனாதனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஒருங்கிணைத்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தி.மு.க இளைஞரணித் தலைவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் என்பதை டெங்கு, காலரா, கொரோனா கிருமிகளை அழிப்பது போல அழிக்க வேண்டும் என்று அற்புதமாக அறை கூவினார். திடீரென்று வானமே இடிந்து விழுந்தது போல அமித் ஷா முதல், உள்ளூர் அம்பிகள் வரை கொந்தளிக்கிறார்கள். நூற்றைம்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சனாதன எதிர்ப்பு நிலவி வருகிறதே, இப்போது என்ன புதுப் பிரச்சினை என்று பார்த்தால் ஆரியத்தின் தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தலாம்.

சனாதனம் என்பது காலத்தால் அழியாத உயர்நெறி. மனிதர்கள் மகிழ்ச்சியாக, அமைதியாக இணைந்து வாழ உதவும் ஒழுக்க நெறி. அதைப்போய் அழிக்கலாமா என்று தமிழ் தொலைக்காட்சிகளில் ஆரிய முகவர்கள் கேட்கிறார்கள். வட நாட்டில் சனாதன தர்மம் என்பதுதான் இந்து மதத்தின் பெயர்; சனாதனத்தை அழிப்பது என்றால், இந்து மதத்தை அழிப்பது என்று பொருள் என்று மாய்மாலம் செய்கிறார்கள். இதில் ஏற்படும் குழப்பங்கள் கொஞ்ச, நஞ்சமல்ல.

தமிழ்நாட்டில் சனாதனம் என்பதன் பொருள் காலத்திற்குப் பொருந்தாத பத்தாம்பசலித்தனம். ஆங்கிலத்தில் Orthodoxy என்பார்கள். அதாவது மூடப் பழக்கங்களை விடாமல் கடைப்பிடிப்பது. மாற்றங்களை ஏற்க மறுப்பது. எல்லா காலங்களிலும் எல்லா மதங்களிலும், சமூகங்களிலும் மாற்றங்களை ஏற்பவர்கள் இருப்பார்கள். மாற்றங்களை ஏற்க மறுத்து பழைய பழக்க, வழக்கங்களையே பின்பற்ற வேண்டும் என்பவர்கள் இருப்பார்கள். இரண்டாவது வகையினர்தான் சனாதனி. அதனால்தான் ஜாதீயத்தை இன்றும் கடைப்பிடிப்பவர்களை சனாதனி என்கிறோம்.

எதில் எது சரி? சனாதனம் என்றால் அழியாத மானுடப் பொது நெறியா? சனாதனம் என்றால் இந்து மதமா? சனாதனம் என்றால் வர்னாஸ்ரமம், ஜாதீயம் உள்ளிட்ட மூடப்பழக்க, வழக்கங்களா?

சனாதனம் என்றால் அழியாத மானுடப் பொதுநெறியா?

தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் பேசும் பல தினுசான சங்கிகள், பார்ப்பனர்கள் இவ்வாறு சனாதனம் என்றால் அழியாத மானுடப் பொதுநெறி என்று பேசுகிறார்கள். சரி, அப்படி எந்த நூலில் கூறியுள்ளது, அதற்கான ஆதாரங்களைக் கூறுங்கள், அந்த நெறிகளுக்கான பட்டியலைக் கூறுங்கள் என்றால் ஏதேதோ பேசுகிறார்களே தவிர, இந்த நூலில் இந்த இடத்தில் இவைதான் நெறிகள், அவற்றின் பெயர்தான் சனாதன தர்மம் என்று சான்றாதாரம் காட்ட மாட்டேன் என்கிறார்கள்.

அதற்கு மாறாக சனாதன தர்மம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள உதவியாக அறிஞர் பொ.வேல்சாமி முகநூலில் பகிர்ந்திருந்த 1907ஆம் ஆண்டு வெளியான நூலைப் பார்க்கலாம். இந்த நூலை பலரும் தொலைக்காட்சி விவாதங்களில் மேற்கோள் காட்டுகிறார்கள். இந்த நூலானது “காசிப்பிரதான ஹிந்து வித்யாசாலையின் சம்ரஷணை கமிட்டியார் தம் ஆட்சிக்குட்பட்ட சகல வித்யாசாலைகளிலும் சிறுவர்க்கு மதம், நீதி இவ்விஷயங்கள் கற்பிக்கப்படுவதற்கு” உருவாக்கியது. மூலம் எந்த மொழியில் இருந்தது என்று தெரியாவிட்டாலும், தமிழில் மொழியாக்கம் செய்து 1907ஆம் ஆண்டு “ஸனாதன தர்மம்” என்ற பெயரில் பிராட்வே மினர்வா பிரஸ்ஸில் அச்சடிக்கப்பட்டதான குறிப்புடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. இந்த நூலின் ஏழாம் அத்தியாயத்தில் 150ஆவது பக்கத்தில் நான்கு வருணங்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தின் மிக முக்கியமான அம்சமே மக்களை வர்ணங்களாகப் பிரித்திருப்பதுதான் என்று பெருமையாக நூல் கூறுகிறது. ஆனால், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் சுவாரஸ்யமானது.

முதலில் நாம் மறுபிறவி கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆன்மா வேறு, சரீரம் என அழைக்கப்படும் உடல் வேறு. இந்த ஆன்மா என்பதுதான் குழந்தைப் பருவத்திலிருந்து ஒவ்வொரு பிறப்பின்போதும் மெள்ள ஒவ்வொரு வர்ணமாக வளர்ந்து வர வேண்டும். முதல் பிறவியில் அது குழந்தையாக இருக்கும்போது சூத்திர வர்ணத்தின் சரீரத்தில் பிறக்கும். அப்போது பிறர் சொற்படி கேட்டு, பிறருக்கு சேவை செய்ய வேண்டும்.

அப்படிச் சரியாக சேவை செய்தால் பிரமோஷன் கிடைத்து வைசிய வர்ணத்தில் பிறக்கும்; அடுத்து சத்திரிய வர்ணம்; எல்லா பிறவிகளிலும் சரியாக நடந்து கொண்டால் ஆன்மா நல்ல முதிர்ச்சியடைந்து பிராமண வர்ணத்தில் பிறக்கும். அதில் சரியாக நடந்துகொண்டால் அது பிரபஞ்ச முதலாளியான ஈஸ்வரனுடன் கலந்து விடும். இல்லாவிட்டால் மீண்டும் பிறப்புதான்.

இந்த நூல் என்ன கவலைப்படுகிறது என்றால் சமகாலத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையில் (ஸ்திதியில்) உள்ள ஆன்மா, தவறான சரீரத்தில் பிறந்துவிடுகிறது என்ற நிலையைத்தான். ஆரம்ப நிலையில் உள்ள ஆன்மா பிராமண உடலில் பிறந்து ஒழுங்காகச் செயல்படாமல் குழம்புகிறது. முதிர்ந்த நிலையில் உள்ள ஆன்மா சூத்திர ர் உடலில் பிறந்தால், பேசாமல் சேவை செய்யாமல் கலகம் செய்கிறது. இந்த ஆன்மா-உடல் தவறாக இணைந்துவிடுவதில் நிறைய குழப்பம் நிகழ்கிறது என்று இந்த நூல் கூறுகிறது.

இதுதான் சனாதன தர்மத்தின் அடிப்படையா என்று கேட்டால் தமிழ் தொலைக்காட்சி பார்ப்பனர்கள், இல்லை இந்த நூல் இல்லை என்கிறார்கள். காஞ்சி சங்கராச்சாரியார் கூறியதை மேற்கோள் காட்டினால் அதுவும் இல்லை என்கிறார்கள். ஆனால் காலத்தால் அழியாத தர்மம் என்று கிளிப்பிள்ளைகள் போல சொல்கிறார்கள்.

சரி, ஊரிலுள்ள சாமியார்கள், சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் எல்லோரையும் கூட்டி இதுதான் 2023ஆம் ஆண்டுக்கான சனாதன தர்மம் என்று தெளிவாக ஒரு நூலை எழுதுங்கள் என்றால் அதையும் செய்வதில்லை. கேட்டால் எங்கள் ஹிந்து மதத்தில் எத்தனையோ பிரிவுகள், சிந்தனைகள் என்பார்கள். வெட்டிப்பேச்சு மாய்மாலத்தைத் தவிர ஆய்வு மனப்பான்மையோ, அறிவு நேர்மையோ இல்லாமல் தமிழ்நாட்டில் ஆரிய மாயை வேலை பார்க்கிறார்கள்.

சனாதனம் என்றால் இந்து மதமா?

இங்கேதான் பெரிய பிரச்சினை. காசி வித்தியாசாலை நூல் தெளிவாக சனாதன மதம், ஆரிய மதம், ஹிந்து மதம் எல்லாம் ஒன்றுதான் என்று கூறுகிறது. அதாவது பார்ப்பனர்களின் மதம். இங்கே பிரச்சினை என்னவென்றால் இந்தியா முழுவதும் கும்பிடப்படும் சாமிகள் எல்லாவற்றிலும் பார்ப்பனர்கள் அவர்கள் லேபிளை ஒட்டி விட்டார்கள். எல்லா தரிசனங்களும் இந்து என்கிறார்கள். உதாரணங்களைப் பார்ப்போம்.

தமிழ் சைவ சித்தாந்தம் ஒரு தனித்துவமான தரிசனம். இதைப் பயின்ற சான்றோர்கள் வேத அதாவது வைதீக மரபை ஏற்பதில்லை. சோமசுந்தர பாரதியார் அவர் திருமணத்தில் பார்ப்பன புரோகிதர்களையோ, சடங்குகளையோ அனுமதிக்கவில்லை. தமிழ் சைவ தரிசனத்தில் நால்வர்ண கோட்பாட்டை குறித்த விளக்கங்களோ, விதிகளோ இல்லை. அதனால் வடலூர் ராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்கம் என்ற தரிசனத்தையும், அருட்பா என்ற பாடல் தொகுப்பையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வழங்கினார்.

ஆனால், இப்போது இவையெல்லாமே இந்து மதம் என்கிறார்கள். ஆளுநர் ரவி சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரே சனாதனத்தின் உச்சம் என்று கூச்சமில்லாமல் பொய் பேசுகிறார். சத்தியவேல் முருகனார் போன்ற சைவப் பெரியோர்கள் தமிழ் சைவம், இந்து மதம் அல்ல என்று கூறினாலும் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தியாவில் உள்ள எத்தனையோ தரிசனங்கள், வழிபாட்டு முறைகள், தெய்வங்கள் ஆரியர்களின் வேதகால மூலங்களுக்குத் தொடர்பில்லாதவை. ஆனால், அனைத்தையும் தங்கள் செல்வாக்குக்குள் அடக்க விரும்பும் பார்ப்பனர்கள் எல்லாவற்றிலும் தங்கள் சனாதன லேபிளை ஒட்டி, எல்லாம் இந்து மதம் என்று சாதிக்கிறார்கள்.

சனாதனம் என்பது மூடப் பழக்கங்களா?

பார்ப்பனரானாலும் வைணவர்களிடையே ஜாதி வேற்றுமை பார்ப்பதை கடுமையாக எதிர்த்தார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜர். பார்ப்பனரல்லாதவரானாலும் தன் குருவாக நினைத்த திருக்கச்சி நம்பிகளை அவர் மனைவி அவமரியாதை செய்ததால், மனைவியைப் பிரிந்தார். அவருடன் முரண்பட்ட பார்ப்பனர்கள்தான் சனாதனிகள். ராமானுஜர் மாற்றத்தை, சமத்துவத்தை சிந்தித்தார்.

விதவை மறுமணத்தை ஏற்க மறுத்தவர்களை சனாதனிகள் என்று அழைத்தார்கள். குழந்தை திருமணத்தை தடை செய்வதை எதிர்த்தவர்கள், தேவதாசிகள் தடை சட்டத்தை எதிர்த்தவர்கள், ஆலய நுழைவை எதிர்த்தவர்கள் எல்லோரையும் சனாதனிகள் என்று அழைத்தார்கள்.

எனவே சனாதனம் என்பது மாற்றத்தை மறுக்கும் பிற்போக்கு கொள்கைகள், வர்ணாதர்மம் என்றே பொருள்படும்.

பாரதம் என்ற வார்த்தையின் மூலாதாரம் என்ன?

இந்தியிலும், வேறு பல மொழிகளிலும் பாரத் என்றுதான் ஏற்கனவே குறிப்பிட்டு வருகிறார்கள். ஆங்கிலத்தில்தான் இந்தியா என்ற சொல் புழங்குகிறது. தமிழிலும், வேறு சில மொழிகளிலும் இந்தியா என்று புழங்குகிறார்கள். இப்போது பிரச்சினையே ஆங்கிலத்திலும் இந்தியாவை தவிர்த்து பாரத் என்று கூற வேண்டுமா என்பதுதான்.

இந்தியாவிற்குள் நிலத்தில் பயணம் செய்து வந்தவர்கள் அனைவரும் இமய மலைத்தொடரில் இருந்த கைபர், போலன் கணவாய் வழியாகத்தான் வந்தார்கள். அவ்விதம் வந்தவர்கள் முதலில் எதிர்கொண்டது சிந்து நதி தீரம். சிந்து என்பதை கிரேக்கர்கள் இன்டஸ் என்று அழைத்தார்கள். உதாரணமாக கி.மு. நான்காம் நூற்றாண்டில் மெகஸ்தனிஸ் இண்டிகா என்ற நூலை எழுதினார். இதைத் தொடர்ந்த திரிபுதான் இந்தியா. கொலம்பஸ் அமெரிக்காவுக்கு அருகிலுள்ள தீவுகளை அடைந்தபோது அதை இந்தியா என்று நினைத்ததால் இன்றளவும் அது வெஸ்ட் இண்டீஸ், மேற்கு இந்தியா என்று அழைக்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தெரியும்.

பாரசீகர்களும், அரேபியர்களும் சிந்து என்பதை ஹிந்த் என்று எழுதினார்கள். அதனால் அந்த நதியை ஒட்டிய பகுதியை ஹிந்துஸ்தான் என்றார்கள். எனவே இந்துஸ்தான் என்ற பெயரும் சிந்து நதியை ஒட்டியதுதான். ஆனால் இதே பெயரில் ஹிந்து மதம், ஹிந்தி மொழி என்றெல்லாமும் பெயரிட்டுவிட்டதால் ஹிந்துஸ்தானம் என்பதைவிட இந்தியா என்ற பெயர் சற்றே பொதுத்தன்மையுடன் உள்ளதாலோ என்னவோ இந்தியா என்ற பெயரே ஆங்கிலத்தில் நிலைத்துவிட்டது.

இப்போது பாரதீய ஜனதா கட்சி நமக்கு நாமே வைத்துக்கொண்ட பெயர் பாரதம் என்கிறது. பார்ப்பனர்கள் சொல்லும் மந்திரங்களில் “ஜம்புத்வீபே, பரத கண்டே” என்று சொல்லுவதாகத் தெரிகிறது. தமிழ்த்தாய் வாழ்த்திலும் “சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டமிதில்” என்று வருகிறது. இதெல்லாம் கண்டம் என்ற நிலப்பரப்பை சுட்டுகின்றன. தேசம் என்பதையல்ல. பின்னால் இருபதாம் நூற்றாண்டில் பாரதியார் தமிழில் பாரத தேசம் என்பதை பிரபலப்படுத்தினார். வங்காளத்திலும், இந்தியிலும் “பாரத் மாதா” என்ற வழக்கு நிலைப்பட்டது.

இதெல்லாம் சரிதான். இந்தியா சிந்து நதியிலிருந்து வந்தது. பாரதம் எதிலிருந்து வந்தது என்று கேட்டால்தான் ஆரியம் பல்லிளிக்கிறது. ஜட பரதன் என்ற முனிவர் என்கிறது. பரதன் என்ற மன்னன் என்கிறது. இவர்களுக்கெல்லாம் எந்த சரித்திர ஆதாரமும் இல்லை. எல்லாம் புராணக் கற்பனையில் உருவானவை.

மகாபாரதம் என்று ஒரு இதிகாசத்திற்கு பெயர் இருக்கிறது. இதற்கு ஏன் பாரதம் என்று பெயர் என்றால் அதிலும் திட்டவட்டமாக ஒரு தெளிவில்லை. குரு வம்சத்தின் முக்கியமான மன்னன், முதல் மன்னன் பரதன் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

இந்தியாவில் ஆரியர்களுக்கு முன்பே பல்வேறு பண்பாடுகள் நிலவின என்பதில் ஆய்வாளர்கள் யாருக்கும் எந்த ஐயமும் கிடையாது. ஆரிய பண்பாடு மட்டுமே இந்தியாவின் முக்கிய பண்பாடு என்று யாரும் வாதிட முடியாது. திராவிட பண்பாடும் சரி, பல்வேறு பூர்வகுடிகளின் பண்பாட்டு மூலகங்களும் சரி புறக்கணிக்கத்தக்கவை அல்ல. இந்த பண்பாடுகள் பலவும் ஆரியர்களுடன் முரண் உறவைக் கொண்டவை.

இந்த நிலையில் அனைவரும் ஏற்றுக்கொண்ட புவியியல் அடிப்படை கொண்ட இந்தியா என்ற பெயரே ஆங்கிலத்தில் புழங்குவதுதானே சரியாக இருக்கும்? இந்தியில் ஏற்கனவே பாரத் என்ற பெயரைத்தான் ரூபாய் நோட்டிலும், பாஸ்போர்ட்டிலும் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் இந்தியா. இதை இப்போது மாற்றுவது நாட்டை ஆரியமயமாக்கத்தானே? என்று மடியும் இந்த ஆரிய மாயை?  

கட்டுரையாளர் குறிப்பு:

one country one election Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

+1
0
+1
1
+1
0
+1
9
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *