காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத் ஜோடோ நடைபயணத்தில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர் பங்கேற்றனர்.
பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நேற்று தொடங்கினார்.
இந்நிலையில் 2வது நாள் பயணத்தை குமரியில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் இன்று அதிகாலை தேசியக் கொடி ஏற்றி தொடங்கினார்.
வெள்ளை நிற உடையணிந்த காங்கிரஸ் தொண்டர்களுடன், வழியெங்கும் நூற்றுகணக்கான பொதுமக்களும் இந்த நடைபயணத்தில் பங்கேற்று வருகின்றனர்.
அனிதா சகோதரர் அளித்த மனு!
இந்த நடைபயணத்தில் அந்த பகுதியில் உள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல்.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் ராகுல்காந்தியை சந்தித்தனர்.
திடீரென ராகுலுடன் சேர்ந்து நடை பயணத்தை மேற்கொண்ட அனிதாவின் தந்தையும், சகோதரரும், அவரிடம் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அனிதா மரணம் – ராகுல் காந்தி கருத்து!
முன்னதாக சேலத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற ராகுல்காந்தி, நீட் தேர்விற்கு எதிராக பேசியிருந்தார்.
அப்போது,”தமிழ்நாட்டில், நீட் தேர்வின் காரணமாக அனிதா தற்கொலை செய்துகொண்டு இறந்தது, தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தியது.
அதனால் நீட் தேவையா… தேவையில்லையா என்பதை மாநில அரசு முடிவுசெய்ய வேண்டும். நீட் தேர்வால் அனிதாவைப் போல வேறு ஒரு மாணவி இறப்பதை காங்கிரஸ் விரும்பவில்லை” என்று ராகுல் காந்தி கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 150 நாட்கள் நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை, மாணவி அனிதாவின் குடும்பத்தினர் சந்தித்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா