அனிதா ராதாகிருஷ்ணன் மனு: உச்சநீதிமன்றத்தின் சரமாரி கேள்விகள்!

அரசியல்

தமிழக மீன்வளத் துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனின் மனு, இன்று (நவம்பர் 4) உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 2002-2006 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன் (தற்போது தமிழக மீன்வளத் துறை அமைச்சராக உள்ளார்).

இவர் வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில், தனக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வு முன்பு இன்று (நவம்பர் 4) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “லஞ்ச ஒழிப்புத்துறை பதிந்த சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோருவது என்பது ஒரு மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் தொடங்கும் ஒரு வழக்கமான நடைமுறையாக உள்ளது.

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கட்சியினர் தங்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்கின்றனர்.

இது விசித்திரமான நடைமுறையாக உள்ளது. ஆனால், இந்த நீதிமன்றம் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறது.

anitha radhakrishnan case supreme court Petition dismissed

ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாற வேண்டும் என்று இல்லை. ஆட்சிக்கும் இதுபோன்ற வழக்கு விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆட்சி மாறிவிட்ட காரணத்தால், வழக்கு விசாரணையையும், நீதிமன்ற விசாரணையையும் மாற்ற முடியுமா” என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து அவர்கள், “அரசு அலுவலகத்தை உங்கள் சொந்த நலனுக்காக பயன்படுத்த முடியாது. உங்கள் கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீங்கள் தயங்கலாம். ஆனால், ஆட்சி மாறிவிட்டதால், அரசு இயந்திரத்தின் இயக்கம் மாறிவிடாது.

ஆட்சிக்கும் அரசு இயந்திரத்தின் இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மேற்கொண்டு இந்த விவகாரத்தில் கூற எதுவும் இல்லை” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மனுவை திரும்பப் பெற அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஜெ.பிரகாஷ்

டிஜிட்டல் திண்ணை: திமுகவின் பெரியண்ணன் தனம்- காங்கிரஸ் எம்.பி.க்கள் குமுறல்!

குஜராத்: முஸ்லிமை முதல்வர் வேட்பாளராக்கிய ஆம் ஆத்மி

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *