அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு: ED மனு இன்று விசாரணை!

Published On:

| By Selvam

anitha radhakrishnan assets case

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்ககோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 2) விசாரணைக்கு வருகிறது.

தற்போதைய மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2001-2006 காலகட்டத்தில் அதிமுக ஆட்சிகாலத்தில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 2006-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்தசூழலில் கடந்த 2020-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது.

இந்தநிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு ஜூலை 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் “அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் 80 சதவிகித விசாரணை நிறைவடைந்ததால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது” என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்தநிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்ககோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் ஜூலை 17-ஆம் தேதி சோதனை செய்த அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான ரூ.41.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது. இந்தசூழலில் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் பிறக்கும் உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஊக்கத்தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment