தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கடல் அரிப்பு என்பது நீண்ட கால பிரச்சினையாக இருக்கிறது. கடல் அரிப்பால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
இது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையாக மட்டுமல்லாமல், சுற்றுச் சூழல் பிரச்சினையாகவும் பார்க்கப்படுகிறது. கடல் அரிப்பால் கடலோரப் பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக கடல் நிலப்பரப்பை நோக்கி நகர்வதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடல் அரிப்பைத் தடுக்க கடலோரம் பனைமரங்களை அதிக அளவில் நட்டு பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால், இதற்கான குறுகிய கால தீர்வாக கடலோரங்களில் தடுப்புச் சுவர் அமைக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.
ஆனால் அந்தத் தடுப்புச் சுவர் எளிதில் அரிக்கப்பட்டு விடுவதால்… பிரத்யேக பிரம்மாண்டக் கற்களை குவித்து கடல் அரிப்பைத் தடுத்து நிறுத்த அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.
கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், காஞ்சிபுரம் என்று கடலோரப் பகுதிகளைப் பெற்றுள்ள மாவட்டங்களில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக கற்களை குவித்து தடுப்புகள் அமைக்கும் பணி நடந்துவருகிறது.
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த கற்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விடும். இதுபோன்ற பிரத்யேக கற்களை கடலோரம் அமைப்பதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு 50 கோடி ரூபாய் வரை செலவாகும் என்கிறார்கள் மீன் வளத்துறை வட்டாரங்களில்.
இந்த பணிகளை மீன்வளத்துறைதான் கவனித்து வருகிறது. மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்தான் இதற்கான டெண்டர்களை முடிவு செய்ய வேண்டும்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் கடலோர அரிப்பைத் தடுக்கும் பணிகளுக்கான டெண்டர் விடுவது உள்ளிட்ட பணிகளை இன்னொரு முக்கியமான அமைச்சர் பார்த்துக் கொள்வார்,
அவருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மேலிடத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு துறைக்கான அமைச்சரின் பணிகளை இன்னொரு துறைக்கான அமைச்சர் அதிகாரபூர்வற்ற முறையில் கவனித்துக் கொள்வது பற்றி சட்டமன்றத்திலேயே தென் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் வியப்பாகவும் வேதனையாகவும் பேசிக் கொண்டனர்.
”மாப்பிள்ளை இவர்தான்… ஆனால் அவர் போட்டிருக்கிற சட்டை என்னோடது” என்ற படையப்பா கதை போல் அல்லவா இருக்கிறது.
–வேந்தன்
ஓபிஎஸ் அணி வேட்புமனுக்கள் நிராகரிப்பு!
சென்னை vs ஹைதராபாத்: வெற்றி யாருக்கு?