வைஃபை ஆன் செய்ததும் இன்று (ஜூலை 22) கோட்டையில் நடந்த அமைச்சரவை கூட்ட படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன .அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று ஜூலை 22 ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் கேபினட் கூட்டம் இது. அது மட்டுமல்ல கடந்த வாரம் தான் அமலாக்கத் துறையால் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல மணி நேர விசாரணைக்கு பிறகு அனுப்பப்பட்டார்.
அமலாக்கத்துறை ஒரு அமைச்சரை கைது செய்து, ஒரு அமைச்சரை விசாரணை செய்த பிறகு நடைபெறும் கேபினட் கூட்டம் என்பதால் அனைத்து அமைச்சர்களுமே ஒருவித டென்ஷனோடு தான் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். முதல்வருமே கூட டென்ஷனாகத்தான் இருந்திருக்கிறார்.
இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட இருக்கும் நிலையில்… மாற்றுத்திறனாளி ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், கைம்பெண்கள் ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு ஊதிய உயர்வை இன்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டார் தங்கம் தென்னரசு.
மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில்… தங்களுக்கான ஓய்வூதியத் தொகை உயர்த்தப்படாமல் இருப்பதாக அவர்கள் வருத்தப்பட்ட நிலையில்தான் இந்த உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் வரும் 24 ஆம் தேதி தர்மபுரியில் இத்திட்டத்தின் முகாமை துவக்கி வைப்பதாகவும் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். தர்மபுரியைத் தேர்ந்தெடுத்தபோது, ‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்மாவட்டத்தில் இருக்கும் ஐந்து தொகுதிகளிலும் திமுக தோற்றது. அந்த மாவட்டத்தில் ஏன் முகாமை தொடங்கி வைக்க நீங்கள் செல்ல வேண்டும்?’ என்று ஸ்டாலினிடமே சிலர் கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு ஸ்டாலின் சொன்ன பதில்… அதாவது 1989 இல் அப்போதைய முதல்வர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழுக்களை முதலில் தர்மபுரியில்தான் தொடக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியான பல்வேறு திட்டங்களில் இது முக்கியமானது என்பதால் இத்திட்ட முகாமையும் தர்மபுரியில் நான் தொடங்கி வைக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.
1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி” ( International Fund for Agricultural Development) நிறுவனத்தின் உதவியுடன் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கும் திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார். அதனால் இந்த நிகழ்வை வரலாற்றுத் தொடர்ச்சியாகவே கருதுகிறார் ஸ்டாலின்.
இதெல்லாம் நிர்வாக ரீதியான அமைச்சரவை நிகழ்வுகள். அமைச்சரவை கூட்டத்தின் உள்ளே வேறு ஏதேனும் பேசப்பட்டதா என்றால் நிச்சயமாக பேசப்பட்டது.
அமலாக்கத்துறையின் அதிரடி கைது, ரெய்டுக்குப் பிறகான முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பதால் முதல்வர் சற்று இறுக்கமாகத்தான் இருந்தார். நிர்வாக ரீதியிலான முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகு அமைச்சர்களிடம் கொஞ்ச நேரம் பேசியிருக்கிறார் முதலமைச்சர்.
‘நான் ஏற்கனவே நடந்த கேபினட் கூட்டத்துலயே தனித் தனியா சொல்லியிருக்கேன். துண்டு சீட்டோ, லேப் டாப்போ, மொபைல்லயோ பரிவர்த்தனைகளைப் பத்தி எதுவும் வச்சிக்காதீங்க. நம்மளை கண்காணிச்சுக்கிட்டு இருக்காங்கனு வார்னிங் கொடுத்துக்கிட்டே இருக்கேன். ஆனா என்னென்னமோ செய்தி வருது… ஒழுங்காக செயல்படாத அமைச்சர்களை மாத்தறதுக்கும் தயங்கமாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
பின், ‘தேர்தல் நெருங்குற நிலையில் அவங்க எந்த எல்லைக்கும் போவாங்க. அதனால முன்னெச்சரிக்கையா இருப்போம்’ என்றும் அமைச்சர்களுக்கு மீண்டும் அறிவுரை சொல்லியிருக்கிறார் முதலமைச்சர்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு சென்னை மாநிலக் கல்லூரியில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டார் அமைச்சர் உதயநிதி. அந்த நிகழ்வில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசும்போது உதயநிதியின் துறையை மாற்றி சொல்லிவிட்டார். அதன் பிறகு பேசிய அமைச்சர் உதயநிதி ‘இங்க பேசின அமைச்சர் என் துறையையே மாத்திட்டாரு. சரியா செயல்படலைன்னா துறையை மாத்திடுவேன்னு இப்பதான் கேபினட் கூட்டத்துல முதலமைச்சர் வார்னிங் கொடுத்தாரு’ என்று நகைச்சுவையாக அதை வெளிப்படுத்திவிட்டார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் கண்ணப்பன் ரொம்ப அப்செட்டாக இருந்தார். நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து நேற்று அவரை மாற்றி அரசு அறிவிப்பு வந்திருக்கிறது.
நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கண்ணப்பனுக்கு மட்டுமல்ல…பொறுப்பு அமைச்சர்களாக இருக்கும் சீனியர் அமைச்சர்களுக்கும் கொடுக்கப்பட்ட சிக்னல் என்கிறார்கள் கோட்டையில்.
பொறுப்பு அமைச்சர்களாக இருப்பவர்கள் அந்த மாவட்டச் செயலாளர்களின் உரிமையிலும் அதிகாரத்திலும் தலையிடுகிறார்கள் என்று கண்ணப்பனை போலவே மற்ற பொறுப்பு அமைச்சர்கள் மீதும் புகார் போயிருக்கிறது. அதை மனதில் வைத்து இந்த கேபினட் கூட்டத்தில், ‘பொறுப்பு அமைச்சர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் முதலமைச்சர்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
முப்படைகளில் பாலியல் புகார் குழு: மத்திய அரசுக்கு உத்தரவு!
’வானவன்’: யோகி பாபுவின் பர்த்டே ஸ்பெஷல்!