வைஃபை ஆன் செய்ததும் தமிழகத்துக்கு அமித் ஷா வருவது பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்திருந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தும் தமிழகம் தழுவிய நடைப் பயணம் நாளை (ஜூலை 28) மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது.
இப்பயணத்தை பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா துவக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை நடைப் பயண குழுவின் பொறுப்பாளர்களான கே.எஸ்.நரேந்திரன், அமர் பிரசாத் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையே ராமேஸ்வர நடைப் பயணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று முதன் முதலில் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டோம்.
எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சித் தலைவர்களும் இந்த பயண துவக்க விழாவில் கலந்துகொள்கிறார்கள் என்று செய்திகள் வந்தன.
ஆனால் இப்போது இப்பயணத் துவக்க விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வது சந்தேகம்தான் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையும், ‘எடப்பாடி பயணத் துவக்க விழாவுக்கு வருவதை உறுதி செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக, பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது,
‘ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடா யாத்திரை துவக்க விழா கன்னியாகுமரியில் நடந்தபோது தமிழ்நாட்டின் முதல்வரும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான திமுகவின் தலைவருமனா ஸ்டாலின் கலந்துகொண்டார். அதேபோல பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நடைப் பயண துவக்க விழாவில் எடப்பாடி பங்கேற்க வேண்டும் என்று அமித் ஷா விரும்பினார்.
அப்போதே, ‘ராகுல் காந்தி போன்ற தேசிய தலைவர் பங்கேற்பதால் அதில் ஸ்டாலின் பங்கேற்றார். அண்ணாமலை தொடங்கும் யாத்திரையில் நாம் பங்கேற்கலாமா?’ என்று அதிமுகவில் விவாதங்கள் நடந்தது. அதேநேரம் பாஜக தரப்பிலோ, ‘இதை அண்ணாமலை யாத்திரை என்ற ஒரே ஒரு கோணத்தில் பார்க்காதீர்கள். துவக்கி வைக்க அமித் ஷா வருகிறார். எனவே அமித் ஷா துவக்கி வைக்கும் பயணத்தில் கலந்துகொள்ள வாருங்கள் என்று எடப்பாடிக்கு பாஜக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்த அடிப்படையிலும் அடுத்து மதுரை மாநாட்டுக்கு மோடியை அழைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் ராமேஸ்வரம் மாநாட்டில் கலந்துகொள்வதாகத்தான் திட்டமிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் நேற்று (ஜூலை 26) அவருக்கு கிடைத்த தகவல் கோபப்பட வைத்தது.
இந்த நடைப் பயணத்துக்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களை அண்ணாமலை நேரில் சென்று அழைக்கவில்லை. மாறாக எடப்பாடி உள்ளிட்ட அனைவருக்கும் போன் மூலமாகத்தான் அழைப்பு விடுத்தார். மேலும் மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் மூலமாக கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து வருமாறும் கூறினார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்ததால் அவரை கரு. நாகராஜனும் நேரில் சென்று அழைக்கவில்லை. இதுமட்டுமல்ல… நேற்று ஒரே ஒரு நாளிதழில் மட்டும் பன்னீருக்கும் அண்ணாமலை அழைப்பு விடுத்ததாக ஒரு செய்தி வந்திருந்தது.
இதுகுறித்து எடப்பாடி கவனத்துக்கு நேற்று காலையே தெரியப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து அதிமுக தரப்பினர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்ததில், ‘அண்ணாமலை நடைப் பயணத்துக்கு வருமாறு பன்னீருக்கு போன் மூலம் அழைப்பு விடுத்தது உண்மைதான். ஆனால் பன்னீர் துவக்க விழாவுக்கு அழைக்கப்படவில்லை. நடைப் பயணத்தின் இடையில் ஓரிடத்தில் பன்னீர் சந்தித்து அண்ணாமலையை வாழ்த்துவார்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தகவல் எடப்பாடிக்கு தெரியப்படுத்தப்பட்டதும் கடும் கோபம் அடைந்துவிட்டார்.
‘தேசிய தலைவர்கள் நம்மை மரியாதையோடு நடத்துகிற காரணத்தால், நாம் ஏற்கனவே இருக்கும் கசப்புகளை எல்லாம் மறந்து கூட்டணியில் குழப்பம் வேண்டாம் என்று அமைதியாக இருக்கிறோம். ஆனால் இந்த அண்ணாமலை இப்படித்தான் மீண்டும் மீண்டும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறார்.
அதிமுக தலைமையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி இருக்கிறது. இந்நிலையில் நம்மையும் அழைத்துவிட்டு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வத்தையும் போன் போட்டு அழைக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?’ என்று கொதித்திருக்கிறார் எடப்பாடி.
ஏற்கனவே அவர் ஜெயலலிதா பற்றி தெரிவித்த கருத்துக்கு இதுவரை உரிய முறையில் வருத்தம் தெரிவிக்கவில்லை. நாமும் மாசெக்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். இந்த நிலையில் எடப்பாடி அங்கே செல்ல வேண்டாம், பிரதிநிதியாக யாரையாவது அனுப்பி வைக்கலாம்’ என்று அதிமுகவில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அதனால் எடப்பாடி பழனிசாமி நாளை ராமேஸ்வரம் செல்வது இப்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல பாமக தலைவர் அன்புமணி நாளை நெய்வேலியில் என்.எல்.சி.க்கு எதிரான முற்றுகை போராட்டத்தில் ஈடுபட இருப்பதால் அவரும் நடைப் பயண துவக்க விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என்று பாமகவில் தெரிவிக்கிறார்கள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான் பாண்டியன், ஐஜேகே பாரிவேந்தர் உள்ளிட்டவர்கள் நடைப் பயண துவக்க விழாவில் கலந்துகொள்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
கருப்பு உடையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்: 6வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!